துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )

துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?
(10.10.2024இன்று இந்த வருடம் )
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு.

துர்காஷ்டமி – துர்க்கையை வழிபட உகந்த நாள்!

துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் – முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்தத் தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும் வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது இந்த துர்காஷ்டமி தினம்.
வடநாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி. மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து கர்பா நடனம் ஆடிக் கொண்டாடுவார்கள். அன்று முழுவதும் துர்கா மாதாவுக்கு கோலாகலமான வழிபாடுகள் நடைபெறும். தேவிக்குப் புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள்; தீமையை அழிக்க வேண்டுவார்கள். நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு.

துர்காதேவி சரணம்!
சமய நூல்களும் சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்று துர்காஷ்டமி.
துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் துடியான நாள் இது என்கின்றன ஞான நூல்கள். ஆகவே இந்தத் தினத்தில் அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.

இளம் சிறுமியர் தேவியாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்படுவார்கள். மேற்கு வங்கத்திலும் இந்த நாளில் துர்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த துர்காஷ்டமி கோயில்களில் விமர்சையாகவும் வீடுகளில் எளிமையாகவும் கொண்டாடப்படுகிறது.

வீட்டில் பூஜிப்பது எப்படி?
வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில்… ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும். அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய – வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும்; எதிரிகளின் தொல்லைகள் விலகும்; சத்ரு பயம் நீங்கும்.

கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படம் அல்லது விக்ரகத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.

அப்போது துர்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடித் துதிக்கலாம். வீட்டில் வழிபட வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் அருகிலிருக்கும் சிவாலயம் சென்று அங்கு கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி (வீட்டில் எலுமிச்சை தீபமேற்றக்கூடாது) செவ்வரளி மாலை – சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.

ராகு கால நேரத்தில் துர்கையை தரிசித்து வழிபடுவது விசேஷம். கோயிலுக்கும் செல்ல உடல் ஒத்துழைக்கவில்லையா! துர்கா என்ற திருநாமத்தை பலமுறை இருந்த இடத்திலிருந்தே உச்சரியுங்கள்; துன்பங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும்.

த’காரம்,உ’காரம், ரே’பம்,க’காரம், அ’காரம் ஆகிய ஐந்து மகா அட்சரங்கள் அடங்கியதுர்கா’ என்ற சொல், உயர்ந்த மந்திரங்களாகி உங்கள் வேண்டுதலை உடனே நிறைவேற்றும்.

இந்த அட்சரங்கள் முறையே சோம்பலை ஒழிக்கும்; தரித்திரத்தைப் போக்கும்; ரோகங்களை அழிக்கும்; பாபங்களைப் போக்கும்; சத்ரு பயத்தை விலக்கும். ஆக, மகா தேவியான ஸ்ரீதுர்க்கையின் பெயரை உச்சரிக்கும் பக்தன் மேலே சொன்ன ஐந்துவித தீமைகளில் இருந்தும் விடுபடுவான் என தேவி மகாத்மியம் கூறுகின்றது. இவை மட்டுமன்றி தீய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்தப் பிரமை, சாபங்கள், தோஷங்கள் எல்லாம் விலகி நலம் பெறுவார்கள் என்றும் கூறுகின்றது.

சூட்டவேண்டிய பூக்கள்: இன்று முல்லை மலர்களால் ஆன மாலை அணிவித்தும், வெண் தாமரை மலர்களால் அலங்கரித்தும் தேவியை வழிபடலாம்.

நைவேத்தியம்: காலையில் தேங்காய் சாதமும் மாலையில் கொண்டைக் கடலைச் சுண்டலும் படைத்து வழிபடுவது விசேஷம்.

படிக்கவேண்டிய துதிப்பாடல்:
கீழ்க்காணும் தேவி அஷ்டகத்தின் துதியைப் பாடி அம்பாளை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.

ஹா தேவீம் மஹா சக்திம்

பவானீம் பவ வல்லபாம்

பவார்தி பஞ்ஜநகரீம்

வந்தே த்வாம் லோக மாதரம்

கருத்து: தேவியே! மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குபவளும், உலகங்களுக்குத் தாயுமான தங்களை வணங்குகிறேன்.
-மஞ்சுளா யுகேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!