சென்னை தீவுத்திடலை விட்டு வெளியேற்றப்படும் குடியிருப்புவாசிகள் – நடப்பது என்ன?
கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக, சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதியான தீவுதிடலில் வசிக்கும் சுமார் 2,000 குடும்பங்களை பெரும்பாக்கத்திற்கு இடம்மாற்றும் பணி தொடங்கியுள்ளது.கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வுகளை கருத்தில்கொண்டு இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டாலும், தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு பகுதியை அகற்றுவதில் மாற்றமில்லை என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீவுத்திடலில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரியத்திற்கு இடமாற்றம் செய்தால், தற்போது தினக்கூலியாக வேலைக்குச் செல்பவர்கள்,பூ விற்பது, மீன் வியாபாரம், ஆட்டோ ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு எழுகிறது. ஒரு சிலர் தீவுத்திடலில் இருந்து வெளியேறி, அரசாங்கம் அளிக்கும் பெரும்பாக்கம் குடியிருப்புக்குச் செல்ல தயாராகவும் உள்ளனர்.