“இது நம்ம சென்னை”

 “இது நம்ம சென்னை”

இன்று (ஆகஸ்டு 22-ந்தேதி) சென்னை தினம். இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி.அதன்படி இன்று 384வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

டச்சுக்காரர்கள் 1599-ம் ஆண்டு ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் உயர்த்த, லண்டனில் உள்ள வர்த்தக மையத்தில் வியாபாரிகள் கூடி விலை உயர்வை எதிர்த்து கிழக்கு நாடுகள் செல்வத்தை தாமே திரட்ட முடிவெடுத்து 1600-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிழக்கிந்திய கம்பெனி நிறுவினார்கள்.

முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை கம்பெனி அதிகாரிகள் ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே எடுத்துக் கொண்டு வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக் பட்டம் பெற்ற ஆளுநர்கள் டாமர்லா வெங்கடப்பா, அய்யப்பாவிடமிருந்து மதராஸ் பட்டணம் என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர்.

இந்த அனுமதி பத்திரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி எழுதப்பட்டது. இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள்.

டாமர்லா சகோதரர்கள் அந்த இடத்தை தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் இருக்க வேண்டுமென்று விரும்பினர். நிலத்தின் மேற்கு பகுதியில் ரோமன் கத்தோலிக்க தலையாரி மீனவ குடியிருப்பை சேர்ந்த மதராசன் என்பவரின் வாழைத்தோப்பில் தொழிற்சாலை அமைக்க விரும்பினார். இடைத்தரகர் திம்மப்பா தொழிற்சாலைக்கு மதராஸ் பட்டணம் என்று பெயர் சூட்டப்படும் என்று தலையாரி மதராசனுக்கு வாக்குறுதி கொடுத்து வாழைத்தோப்பை வாங்கி கொடுத்ததால் மதராஸ் பட்டணம் என்ற குப்பமும், மதராஸ் பட்டணம் என்ற கோட்டையும், காலப்போக்கில் நெசவாளர்கள் குடியேறிய சுற்றியுள்ள பகுதி சென்னபட்டணம் என்று வழங்கலாயிற்று.

சென்னபட்டணம் வந்ததற்கு இன்னொரு காரணம் கோட்டை கட்டப்பட்ட இடத்தில் சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்ததாகவும் அந்த இடம் அப்போதே சென்னபட்டணம் என்று இருந்ததாகவும், ஆங்கிலேயர் அந்த கோவிலை இடித்து இடிபாடுகளை உபயோகித்து கோட்டை சுற்றி பாதுகாப்பு அரண் எழுப்பினர் என்ற ஆராய்ச்சி குறிப்பு ஒன்று கூறுகிறது. ஆக மதராஸ் என்ற பெயரும் உள்ளூர்வாசிகள் இட்ட பெயர் சென்னை பட்டணம் என்று இருபெயர் தாங்கி நகரம் உருவானது.

1640-ல் பிப்ரவரி மாதம் கோட்டை மற்றும் அதனுள்ளே குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பிரதான கோட்டை வீடு கட்டி முடிக்கப்பட்ட தினம் புனித ஜார்ஜ் தினம் என்பதால் நாளடைவில் வளர்ந்த கோட்டை புனித ஜார்ஜ் பெயர் தாங்கி அரசு அதிகாரத்தின் மையமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இந்திய காவல் துறை உதயமானதும் சென்னையில் தான். மதராஸ் காவல் சட்டம் 1859-ன் படி மதராஸ் போலீஸ் உருவாக்கப்பட்டதின் அடிப்படையில் மத்திய அரசு 1860-ம் ஆண்டு போலீஸ் கமிஷன் காவல் சீர்திருத்தம் செய்ய அமைத்தது. தமிழக காவல்துறை 1859-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே பழமையான காவல் சென்னை காவல் ஆணையம். பாந்தியன் சாலையில் உள்ள ஆணையகம் 1856-ல் போல்டர்சன் ரூ.21,000-க்கு பங்களா சொந்தக்காரர் அருணகிரி முதலியாரிடமிருந்து வாங்கி அலுவலகத்தை அமைத்தார்.

மாநகரின் தெற்கிலும், மேற்கிலும் கூவம், ஏலாம்பூர் ஆறுகள், கிழக்கில் கடற்கரை நல்ல பாதுகாப்பு அளிக்கும் என்பதால் குடியிருப்பும் வியாபார தளமும் அமைக்க உகந்த இடம் சென்னை என்பதில் வியப்பில்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...