“தோழர் ப. ஜீவானந்தம்”

 “தோழர் ப. ஜீவானந்தம்”

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் ஜீவானந்தம். பொதுவுடைமை இயக்கம் என்றதும் இன்றும் நினைவில் வருபவர் தோழர் ஜீவானந்தம். தோழர் என்னும் சொல்லாட்சியின் சொந்தக்காரர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையின் ஈர்ப்பால் தன் வாழ்நாளின் இறுதிவரை, இயன்றவரை போராடியவரைப் பற்றிய வரலாற்றைப் பதிதல் காலத்தின் அவசியம்.

1907ஆம் திகதி பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பிறந்த இவருக்கு முன்னோர் பெயரான சொரிமுத்து என்னும் பெயரை வைத்தனர். ஆனால் காலப்போக்கில் தோழர் ஜீவானந்தம் என்னும் பெயரே நிலைத்தது. பள்ளிக்காலத்திலேயே சமூக இயக்கங்களில் தனது பங்களிப்பை நிலைநிறுத்தி ஈடுபடலானார். மனித வாழ்வை மனுதர்மம் நிர்ணயிக்கக்கூடாது என்றும், மனிதனின் சுய ஒழுக்கமே அவன் உயர்ந்தவன் என்பதை நிர்ணயம் செய்யும் என்றும் உறுதிப்பட உரைத்தவரின் எளிய வாழ்வு போராட்டங்கள் பல நிறைந்தது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்கென தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ஜீவா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தின் சொத்து மட்டுமல்ல அவர் நம் நாட்டின் சொத்து. ஆம் தோழர் ஜீவானந்தம் காங்கிரசு இயக்கத்தில் இருந்தபோது வ.வே.சு. ஐயர் கட்சியின் சார்பில் நடத்திய ஆசிரமத்தில் காந்தியத்தைப் பாடமாகப் போதிக்கச் சென்றவர் அங்கிருந்த நிலைமையைக் கண்ணுற்று பாதிக்கப்பட்டதாக அவரே கூறியுள்ளார். அந்த ஆசிரமத்தில் இரு பிரிவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு இருவேறு பந்தி முறைகள், இருவேறு வகுப்புகள் நடப்பதைக் கண்டு கொதித்தெழுந்து சண்டையிட்டு, காங்கிரசு காரியாலயத்தில் முறையிட, கட்சியின் அமைப்பு முறையே அதுதான் எனப் பதில் வந்தபோது மனமுடைந்தார்.

மகாத்மா காந்தியின் மீது கொண்ட அன்பின் காரணமாக சிராவயல் என்னுமிடத்தில் காந்தி ஆசிரமத்தைத் தொடங்கி நடத்தினார். வகுப்பு பேதமின்றிக் கல்வியும் உணவும் கிடைக்கச்செய்தார். வ.வே.சு. ஐயரின் ஆசிரம நடவடிக்கைகள் பிடிக்காமல் பலரும் தோழர் ஜீவானந்தம் நடத்திய ஆசிரமத்தில் வந்து சேர்ந்தனர். அன்றைய காலத்தில் வர்ண பேத முறையில் இயங்கிய காங்கிரசு கட்சியினர் வ.வே.சு. ஐயரின் மூலம் பலவழிகளில் இடையூறு செய்தனர். இருப்பினும் ஆசிரமத்தை நன்முறையில் இயங்க வைத்தார். பலமுறை வலியுறுத்தி தோழர் ஜீவானந்தம் நடத்திய ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தியடிகள் வருகை புரிந்து பாராட்டினார். ‘இவ்வளவு சிறப்பாக ஆசிரமத்தை நிர்வகிக்க உங்களுக்கு ஏது சொத்து?’ என்று கேட்க, தோழர் ஜீவானந்தம் ‘நாடுதான் என் சொத்து’ எனக் கூற, ‘இல்லை இல்லை நீங்கள் தான் நாட்டின் சொத்து’ என்று கூறினார் மகாத்மா காந்தியடிகள்.

காங்கிரசு இயக்கத்தில் பயணித்து நாட்டின் விடுதலைக்கும், மக்களின் விடுதலைக்கும் போராடிய ஜீவானந்தம் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . சிறையில் இருந்து வெளிவரும் போது தீவிரப் பொதுவுடைமையாளராக வந்தார்.

பல நிலைகளில் வகுப்பு பேதத்தை மகாத்மா காந்தியும் ஆதரித்த நிலையில் இருந்ததைக் கண்டு காங்கிரசு இயக்கத்தில் இருந்து வெளியேறினார். காங்கிரசு கட்சி ஆங்கிலேயரை வெளியேற்ற உறுதி பூண்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் பிராமணர்களை எதிர்த்தது. வாழும் அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் பற்றி யாரும் போராடுவது இல்லையே என மனம் வருந்தினார். அடித்தட்டு மக்களின் சூரியனாகத் தோன்றி பல இடங்களுக்கும் பயணம் செய்து முழங்கினார். பொதுவுடைமை, இலக்கியம் என இரு தளங்களில் சிறப்புடன் பயணித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது வெகுண்டெழுந்து இளைஞர்களின் மனதில் கனலையும், சுதந்திர தாகத்தையும் எழுப்பினார். பகத்சிங் சிறையில் இருந்து எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். பெரியார் அதனை வெளியிட்டார். இந்த நூலை மொழி பெயர்த்தமைக்காக தோழர் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டு திருச்சி வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தை பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டத்தில் அதி தீவிரத்துடன் இயங்கினார். பொதுவுடைமை மேடைகளில் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தவர் தோழர் ஜீவா. மேடையில் முழங்கும் இவரின் வார்த்தைகளைக் கேட்பதற்காகவே இளைஞர்கள் பலர் படையெடுத்து வந்தனர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கி வரும் கலை இலக்கிய மன்றத்தை 1961ல் முறையாகத் தொடங்கி பலரையும் கலைஞர்களாக மாற்றினார்.

பொது வாழ்விலும், சிறையிலும் இருந்த காலத்தில் பலருக்கும் கடித இலக்கியம் மூலம் உணர்வுகளை ஊட்டினார். தமிழில் கடித இலக்கியத்தில் நேரு, அறிஞர் அண்ணா, கலைஞர், மு.வ. எனப் பலரும் இருக்கக் கடித இலக்கியம் மூலம் மறுமலர்ச்சியை உண்டாக்கிய தோழர் ஜீவானந்தம் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் நிச்சயமாக அரசியல் உண்டு என்றுதான் கூற வேண்டும்.

மகாகவி பாரதியோடு இணக்கமாக இருந்து பல நேரங்களில் அவரின் பாடல்களை மேடை இலக்கியம் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார் தோழர் ஜீவா. பாரதியின் மறைவுக்குப் பிறகு அவரின் பாடல்கள் ஏ.வி.எம். நிறுவனத்திடமும், விசுவநாதரிடமும் தங்கியது. மகாகவி பாரதி இந்த நாட்டு மக்களுக்காக இயற்றிய கவி வரிகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக ஜீவா போராடலானார். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தோழர் ஜீவாவின் போராட்டத்திற்குப் பலனாக ஏ.வி.எம். நிறுவனம் பாரதியின் பாடல்கள் எல்லோரும் பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு இறங்கி வந்தது. பார் போற்றும் கவிஞனின் வரிகளை மீட்டு மக்களுக்கு வழங்கிய மண்ணின் மைந்தர் தோழர் ஜீவானந்தம் மீண்டும் பல நிலைகளில் கனல் மூண்டெழும் கவிதைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.

இலக்கிய மேடைகளில் அன்றைய காலத்தில் தோழர் ஜீவானந்தம் அளவுக்கு எரிதழல் பேச்சுகளை யாரும் பேசியது இல்லை. மேடை இலக்கியம் என்றால் அதில் முதலாமவர் தோழர் ஜீவானந்தம் என்னும் பெயர்தான் இடம் பெற்றுள்ளது. தோழர் ஜீவானந்தம் அவர்களைப் பின்பற்றியே அன்றைய காலத்தில் பலரும் மேடை நடைக்கு வந்தனர்.

‘பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே
காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா’

என்னும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர். பாரதியின் பாதையில் மேடை மூலமாகத் தன் கவிதைகளைக் கொண்டு சேர்த்தவர் தோழர் ஜீவானந்தம். ‘பாட்டாளிகளின் விடுதலையே பார் விடுதலை’ என முழங்கி பாட்டாளி மக்களின் உரிமைகளுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாவலராய் திகழ்ந்த தோழர் ஜீவானந்தம் தனக்கென எந்த உடைமைகளையும் சேர்த்து வைக்காமலேயே வாழ்ந்தார். நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரமே பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதைச் செயலாக்கிய செயல் வேந்தர் ஜீவா.

பொதுவுடைமைக் கொள்கைகளை மக்களிடத்தில் சேர்க்க ‘ஜனசக்தி’ என்னும் இதழைத் தொடங்கினார் . தமிழ் இலக்கியத்தை மக்களிடம் சேர்க்க ‘தாமரை’ என்னும் இதழையும் தொடங்கினார். இந்த இரண்டு இதழ்களும் இன்றளவும் வெளிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்காகவும், பாட்டாளி மக்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ஜீவானந்தம் இலக்கிய அரங்கிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார். இலக்கியச் சுவை, புதுமைப்பெண், மொழியைப் பற்றி ஜீவா, பெண்ணுரிமைக் கீதங்கள், நான் ஏன் நாத்திகன் ஆனேன் (மொழிபெயர்ப்பு) என்று இலக்கிய வரிசையிலும் தோழர் ஜீவானந்தம் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவரின் மேடை முழக்கங்கள் பல இன்னும் நூல் வரிசை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொழிலாளர் பிரச்னை எங்கெல்லாம் நடக்கின்றதோ அங்கெல்லாம் முதல் வரிசையில் ஓங்கிய குரலால் ஒலிப்பவர் தோழர் ஜீவானந்தம். பலமுறை காவல்துறையின் தடியடிகளுக்கு உட்பட்டு தழும்புகள் பெற்றாலும் பாட்டாளிகளின் கூட்டாளியாய் பட்டிதொட்டி எங்கும் பயணம் செய்து உணர்வுகளை, உணர்ச்சிகளை, உரிமைகளை உரக்கச் சொல்லிக் கொடுத்தவர் தோழர் ஜீவானந்தம்.

தோழர் ஜீவானந்தம் தன்னை அரசியல்வாதி என்று அழைப்பதை விரும்பாமல் பாட்டாளிகளின் கூட்டாளி என்று அழைப்பதையே விரும்புபவர். பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் இலங்கையில் இருந்து இயங்கி கடித முறையில் தன் பங்களிப்புகளை ஆற்றி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் ஆகிப் பல தீர்மானங்கள் கொண்டு வர உறுதுணையாக இருந்தார்.

பொதுவுடைமைக் கருத்துகளைத் தமிழில் கூற பல சொல்லாக்கங்களையும் தோழர் ஜீவானந்தம் உருவாக்கினார். சோசலிச சரித்திரம், சோசலிச தத்துவம் என்னும் நூல்களை இயற்றி வெளியிட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் 1952ல் வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்றம் சென்ற தோழர் ஜீவானந்தம் மாறுபட்ட சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். சட்டமன்றத்தில் இவர் ஆற்றிய உரைகள் பலரால் பாராட்டப்பட்டது. சட்டமன்றத்தில் மூதறிஞர் ராசாசி அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். அதேசமயம் ராசாசி மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினார்.

குலக்கல்வி திட்ட எதிர்ப்புகள் காரணமாக ராஜாஜி அவர்கள் பதவி விலகி காமராசர் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழில் மேடை நாடகங்களுக்குத் தடை என்ற தீர்மானம் கொண்டு வர இருந்தபோது துணிந்து பல கருத்துகளை முன்வைத்து அந்தத் தீர்மானம் வராமல் மேடை நாடகங்களைக் காத்தவர் தோழர் ஜீவானந்தம்.

1962 ல் மீண்டும் வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டபோது பாட்டாளிகளின் கூட்டாளியாய் வாழ்ந்த தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு மக்கள் அளித்த பரிசு தோல்வி.

தோழர் ஜீவானந்தம் பொது வாழ்வால் தன் குடும்ப வாழ்வைச் சரிவரக் கவனிக்க இயலாமல் இருந்தார். தன் மகள் பிறந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகே சந்தித்தேன் என்று கூறுவதில் இருந்து இவரின் களப் போராட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

தாம்பரத்தில் அரசுப் பள்ளிக்கூடம் திறப்பு விழாவிற்குச் சென்றார் காமராசர். அந்தப் பள்ளிக்கூடம் தொடங்குவதற்குச் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டவர் தோழர் ஜீவானந்தம். அதன் காரணமாக தாம்பரத்தில் அரசுப் பள்ளி அமைய முதல் காரணமாகத் திகழ்ந்தார். ஆனால் பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பே இவரின் சட்டமன்ற வாழ்வும் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அப்பள்ளியைத் தோழர் ஜீவானந்தம் திறந்து வைப்பதுதான் முறை என்று கருதி முதலமைச்சராக இருந்த காமராசர் அவரின் இல்லத்திற்குச் சென்றார். மிக எளிய ஓலைக் குடிசையில் பாட்டாளிகளின் பாதுகாவலன் வசித்து வருவதை நேரில் பார்த்து மனம் வருந்தினார்.

காமராசரை அமர வைக்கக் கூட இருக்கை இல்லாமல் வரவேற்றார் ஜீவானந்தம். ‘தாம்பரம் பள்ளிக்கூடம் கட்ட நீதான் குரல் கொடுத்தாய். அந்தப் பள்ளிக்கூடம் அமைய நீதான் காரணம். அதனால் நீதான் திறந்துவைக்க வேண்டும்’ என்று காமராசர் அழைக்க, ‘இப்போது நான் சட்டமன்ற உறுப்பினர் இல்லையே’ என ஜீவா கூற, ‘நீ எப்போதும் மக்கள் மன்ற உறுப்பினர் ஆதலால் வா’ என்று நட்பாய் அழைத்தார். ‘காமராசு நீங்கள் முதலில் செல்லுங்கள் நான் தயாராகி வருகிறேன்’ என்று கூறினார். விழா மேடையில் காத்திருந்த காமராசர், தோழர் ஜீவானந்தம் வராத காரணத்தால் தானே திறந்து வைத்தார். தாமதமாக வருகை புரிந்த தோழர் ஜீவாவை, காமராசர் ‘ஏன் தாமதம்?’ என்று கேட்டார் . ‘காமராசு என்னிடம் ஒரு நல்ல சட்டைதான் இருந்துச்சு, துவைத்து ஈரத்துடனே வந்தேன்’ எனக் கூற காமராசர் மனம் வருந்தினார். நாட்டு விடுதலைக்கும், மண் விடுதலைக்கும், பாட்டாளிகளின் உரிமைகளுக்கும் போராடிய தோழர் ஜீவானந்தம் இவ்வளவு வறுமையில் இருப்பது கண்டு மனம் வருந்திய காமராசர் மறைமுகமாகத் தோழர் ஜீவானந்தம் மனைவிக்கு வேலை வாய்ப்புக்கு உதவினார் என்பது வரலாறு.

தோழர் ஜீவானந்தம் அவர்கள் 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் நாள் உடல்நலம் குன்றிய நிலையில் இயற்கை எய்தினார். மரணிக்கும் தறுவாயில் தோழர் ஜீவானந்தம் கூறிய கடைசிக் கூற்று ‘காமராசிடம் தெரிவித்துவிடுங்கள்’ என்பதுதான்.

தோழர் ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கையானது போராட்டம், பொது வாழ்க்கை, சிறை வாழ்க்கை என்று கடந்தது. தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்கு உழைத்த தோழர் ஜீவானந்தம் காந்தியின் கூற்றுப்படி ‘இந்தியாவின் சொத்து’.

புகழ்பெற்ற ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் தோழர் ஜீவானந்தம் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரின் படத்தைப் பொதுவெளியில் காட்டி இன்றைய இளைஞர்களிடம் யார் இவர் எனக் கேட்ட போது, இன்றைய இளம் தலைமுறையினர் கூறிய பதில் கேட்டு வருத்தமும் வேதனையும் மட்டுமே கொள்ளமுடிகிறது.

கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் கலையையும், கலைஞர்களையும் உருவாக்கிய பாட்டாளி வேந்தனுக்கு இந்த நாடு செய்த நற்செயல் வழக்கம்போல தபால்தலை வெளியீடு. வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு இவரின் பெயரைச் சூட்டியது ரயில்வே துறை.

வியாசர்பாடி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தினர் அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பதாகைகளை அமைக்க முன்வருவார்களா? தாம்பரம் பள்ளிக்கூடம் அமையக் காரணமாகத் திகழ்ந்து அவரால் உருவான அந்தப் பள்ளிக்கூடத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு அடையாளம் காட்ட வேண்டும். சட்டமன்றத்தில் தோழர் ஜீவானந்தம் ஆற்றிய உரைகளை இன்றைய இளைய சமுதாயம் கற்க வேண்டும். கலை இலக்கிய மன்றத்தால் பலன் பெற்ற பெரும் படைப்பாளிகள் அதற்கான காணிக்கையாகவாவது தோழர் ஜீவானந்தம் வாழ்வை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...