படப்பொட்டி – ரீல்: 12 – பாலகணேஷ்
புரட்சி + தேசபக்தி = ‘தியாகபூமி’
1986ம் ஆண்டு சுஜாதா சினிமாவுக்காக எழுதிய ‘விக்ரம்’ கதையைக் குமுதத்தில் தொடராக வெளியிடச் செய்தார் கமல். படத்தின் ஸ்டில்களுடன் வரத் தொடங்கியது. கதை வந்த வேகத்திற்குப் படம் வளராததால் பல ஸ்டில்கள் ரிப்பீட் செய்யப்பட்டு கதை முடிந்ததும் படம் திரைக்கு வந்தது.
அதற்கு முன்பாக 1981ல் தன் ‘மௌனகீதங்கள்’ படத்தின் கதையை படத்தின் ஸ்டில்களுடனேயே (க்ளைமாக்ஸ் தவிர்த்து) வெளியிட்டார் கே.பாக்யராஜ். சரியான விகிதத்தில் கதை வளர்ந்த வேகத்திற்கு படமும் வளர்ந்து க்ளைமாக்ஸைத் திரையில் காண்க என்று பாக்யராஜ் அறிவித்த அதேசமயம் படமும் தியேட்டர்களில் வெளியானது.
இந்த ஸ்டைலை அசால்ட்டாக 1938லேயே செய்து காட்டியவர் கல்கி. சினிமாவுக்கென்றே கல்கி எழுதிய கதையான ‘தியாக பூமி’ அந்தப் படத்தின் ஸ்டில்களுடனேயே (ஓவியங்களுக்குப் பதிலாக) ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.