சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)

 சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!

பகுதி (2)– எஸ்.ராஜகுமாரன்

படப்பிடிப்பு தேதிகள் உறுதியான பின் எனக்குள் பதற்றம் உருவாயிற்று. ஒரு சினிமா ரசிகன் என்ற வகையில் சிவாஜி என்பவர் என் மனதில் ஒரு கடவுள் மாதிரி இருந்தார். அவரை சந்திக்கப் போகிறோம், அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாம் உதவி இயக்குநராக பணிபுரியப் போகிறோம் என்பது விவரிக்கமுடியாத சந்தோஷமாக இருந்தது.

ஏவிஎம் ஸ்டுடியோவில், சம்சாரம் அது மின்சாரம் செட்டில் குடும்பம் ஒரு கோவில் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. அப்போது வெளியாகி வெற்றி பெற்று, தேசிய விருதையும் பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தின் திண்ணை வைத்த – முற்றம் வைத்த தஞ்சாவூர் பாணி ஓட்டு வீடு படப்பிடிப்பு அரங்கு அது. சினிமாவில் செயற்கையான பொருட்களைக் கொண்டு போடப்படும் செட் போல அன்றி நிஜமான ஓட்டு வீடு கட்டுமானத்தில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் பல திரைப்படங்களில் நடித்தது அந்த கிராமிய ஓட்டு வீடு. குடும்பம் ஒரு கோயில் திரைப்படத்தின் பிரதான கதைக்களமும் அந்த வீடுதான். படத்தில் அதுதான் சிவாஜியின் வீடு. தற்போது அந்த இடத்தில் போஃர்டீஸ் ஹாஸ்பிடல் உள்ளது. ( இப்போது காவேரி மருத்துவமனை)

அப்ரண்டீஸ் அல்லது கடைசி உதவி இயக்குநர் என்று அன்று சினிமாவில் நடைமுறையில் இருந்தது. கிளாப் அடிப்பது என் பணி. முன்பே க்ளாப் அடிக்க குழுவில் இருந்த என் சீனியர் உதவி இயக்குநர்களிடம் தீவிர பயிற்சி பெற்றிருந்தேன். சிவாஜி போன்ற மூத்த தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் கூடுதல் சிரத்தை எடுத்து எனக்கு அவர்கள் பயிற்சி அளித்தனர். முதல் நாள் படப்பிடிப்பில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிக்கும் காட்சியில் வெற்றிகரமாக கிளாப் அடித்தேன். ஒரு சினிமா உதவி இயக்குநர் படப்பிடிப்பில், சரியாக முதல் கிளாப் அடிப்பது என்பது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது போன்றது.

கலைக் கடவுள் மாதிரி திரையரங்குகளில் அன்று நான் ரசித்த, வியந்து போற்றிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் ஒரு நாள் படப்பிடிப்பில் பணிபுரிந்து முடித்த பின் என்னை என்னால் நம்ப முடியவில்லை! அவ்வளவு இயல்பாக பழகினார்! நகைச்சுவை ததும்ப பேசினார்! இரண்டாவது நாள் அவர் வீட்டிலிருந்து வந்த சிற்றுண்டியை இயக்குநருடன் அமர்ந்து உதவி இயக்குநர்களான நாங்களும் சாப்பிட்டோம். சிவாஜி நடிக்கும் திரைப்படங்களில் சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் உடன் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர் ஒளிப்பதிவாளர் குழுவில் இருப்பவர்களுக்கும் காலை உணவு, அவர் வீட்டுச் சிற்றுண்டிதான் என்பதை அறிந்தேன். பெரிய சில்வர் கேரியரில் வரும் இட்லி, பொங்கல், பூரி, ஊத்தப்பம், மெதுவடை, வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, நல்லெண்ணெய் மிளகாய்ப்பொடி ஆகிய காலைச் சிற்றுண்டி இப்போதும் நினைவில் ருசிக்கும் பாரம்பரிய தஞ்சாவூர் சுவை நிறைந்தவை.

படப்பிடிப்பு தொடங்கி இரண்டாவது நாளிலேயே அவருக்கு நான் மிகவும் நெருக்கமானேன். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். ஒன்று நானும் அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சாவூர்க்காரன். இரண்டாவது கலைஞர், ஆரூர்தாஸ், அரங்கண்ணல், சுரதா போன்ற திரையுலக எழுத்தாளுமைகள் என் தந்தையாரின் நண்பர்கள் என்பதை அவர் அறிந்தது. மூன்றாவது எங்கள் படப்பிடிப்புக் குழுவில் நான்தான் இளையவன்! அப்போது என் வயது இருபத்தி இரண்டு! வெடவெடவென்று துருதுருவென்று இருந்த என்னை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

தியேட்டரில் படம் பார்த்து பிரமித்த ஒரு பிரபல கதாநாயக நடிகரான சிவாஜியின் கடவுள் பிம்பம் இரண்டு நாட்களிலேயே கலைந்தது. படப்பிடிப்பில் இணை இயக்குநர்கள் என்ற சீனியர் உதவி இயக்குநர்கள் நடிகர் நடிகைகளுக்கு வசனம் சொல்லித் தருவார்கள். கிளாப் அடிப்பது, செட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் நடிகர் நடிகைகளை ஷாட்டுக்கு அழைத்து வருவது, இயக்குநர் தீர்மானிக்கும் ஷாட்டுக்கு ஒளிப்பதிவு செய்யும் போது, நடிகர்களின் இடத்தில் நின்று ‘பொசிஷன் கொடுப்பது’ போன்றவை பயிற்சியில் இருக்கும் கடை நிலை உதவி இயக்குநர்களின் பணி. உதவி இயக்குனர்கள் குழுவில் நான் மட்டுமே இளையவன் என்பதால் எல்லா வேலைகளையும் ஆர்வமுடன் ஓடி ஆடி செய்தேன். அதனால் எல்லா நடிகர்களும் இரண்டொரு நாட்களிலேயே சிறுவனான எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

சரியாக காலை எட்டு மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள் சிவாஜியின் நீல நிற ஸ்டேண்டர்டு கார் நுழையும். அதற்கு முன்னாலேயே நான் ஒப்பனை அறை வாசலில் சீன் பேப்பர் என்னும் வசனம் எழுதப்பட்ட கோப்புடன் காத்திருப்பேன். அவருக்கு ஒப்பனை இடும்போதே படத்தின் உதவி இயக்குநர் ஒருவர் வந்து, காட்சியை விளக்கி வசனங்களைச் சொல்ல வேண்டும். இது சிவாஜி திரைப்படங்களில் நடைமுறையில் இருந்த படப்பிடிப்பு பணி.

அந்தப் பொறுப்பை சிறியவனான என்னிடமே இயக்குநர் ஒப்படைத்தார். காரணம் ஆரூர்தாஸ் அவர்களிடம் வசன உதவியாளனாக எனக்கு இருந்த முன் அனுபவம் அறிந்திருந்தார். சந்தோஷமாகவும் கொஞ்சம் அச்சத்துடனும் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டேன். சிவாஜி, ஒப்பனை அறையில் உட்கார்ந்து ஒப்பனை செய்யத் தொடங்கும் போதே நான் சீன் பேப்பரை படித்து வசனங்களை சொல்வேன். வசனங்களை மனப்பாடம் செய்ய மாட்டார். ஒன்றுக்கு இரண்டு முறை காட்சியின் சூழ்நிலையை கேட்டுத் தெரிந்து கொள்வார்.முக்கியமாக தோன்றும் முத்திரை வசனங்களை சொல்லிப் பார்த்து, சரியாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்பார். அந்த வசனத்தின் வார்த்தைகளை மட்டும் மாற்றாமல், இயல்பான தன் மொழி நடையில் அவற்றைத் தொகுத்து பேசிக் காட்டுவார். “சரியா இல்லனா பயப்படாம சொல்லுடா! நான் நடிகர் நீ இயக்குநர்! சரியா?” ‘எவ்வளவு பெரிய இமயம் போன்ற கலைஞன்! எத்தனை எளிமையான தொழில் பக்தி!’ என்று நான் வியந்திருக்கிறேன்.

அதோடு சரி! அந்த முழுக் காட்சியின் வசனமும் அவர் மூளையில் பதிவாகிவிடும்! படப்பிடிப்பின்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டுமே மீண்டும் சீன் பேப்பரை படித்துக் காட்டச் சொல்வார். காட்சி இயல்பாக வருவதற்காக , தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களின் வசனங்களை திருத்தி உச்சரிக்கவும், நடிக்கவும் படப்பிடிப்பு தளத்திலேயே எளிமையாக பயிற்சி அளிப்பார். இயக்குநர் பணியை எளிதாக்கி விடுவார். படப்பிடிப்பில் சக நடிகர்களுடனும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவுடனும் பார்க்கப்படும் ஒத்திகையில் வசனமும் காட்சியமைப்பும் மேலும் மெருகேறி முழுமையடையும்.

நேசமிகு ராஜகுமாரன் 

uma kanthan

1 Comment

  • “இரண்டாவது பகுதியின் சுவாரசியம்;இமயத்துடனான அளவளாவல் , அருமை.’குடும்பம் ஒரு கோவில் ‘, ரிலீஸில், மதுரை மது தியேட்டரில் பார்த்தேன். பெரிய வரவேற்பு பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...