“இறையன்பு” அவர்களுக்குள்  இத்தனை முகங்களா..?

 “இறையன்பு” அவர்களுக்குள்  இத்தனை முகங்களா..?

‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் .

குவைத்தில் இண்டியன்  ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள் செய்து வந்த இவர் சென்னையில் வந்ததும் சும்மா இருக்கவில்லை.

எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை கடந்த 4 மாதங்களாக நடத்தி வருகிறார். இவருக்கு ஆலோசகர் உலகம் சுற்றும் வாலிபர் லேனா தமிழ்வாணன் . இவருக்கு ஆல் இன் ஆல் உதவி கரங்களாக இருப்பவர்கள் முகநூல் பிரபலம் மடிப்பாக்கம் வெங்கட் மற்றும் சமூக ஆர்வலர் எழுத்தாளர் தயாளன்.

என்.சி மோகன்தாஸ் வீடு இப்போது விருந்தினர் மாளிகையாகிவிட்டது. அவருக்கும் அவரது மனைவிக்கும் விருந்தோம்பல் என்பது ரிஷப் பண்ட் ஒற்றைக் கையில் அடிக்கும் சிக்ஸர் போல ஈஸியான ஜாலியான விளையாட்டாகி விட்டது.

லேனா , பட்டுக்கோட்டை பிரபாகர் ,மாலன் , ஒவியர் ஷியாம் , அகிலா ஜ்வாலா , ராஜலஷ்மி , விஜி ஆர் கிருஷ்ணன்  லதா சரவணன் , கிரிஜா ராகவன் , வேதா கோபாலன்  ,மக்கள் குரல் ராம்ஜி , அமுதா பாலகிருஷ்ணன் என இவர்கள் வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை. (பிரபலமாகாத நானும் ஒரு ஓரமாய் கலந்து கொள்வதுண்டு )

இன்றைய சந்திப்பு தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு அவர்களுடன் சென்னை தி.நகர் பாட்டி வீடு உணவகத்தில் ஏற்பாடாகியிருந்தது.

எழுத்தாளர்கள் லேனா சார் ,மக்கள் குரல் ராம்ஜி , ஆடிட்டர் ஜெ.பி ,மடிப்பாக்கம் வெங்கட் , தயாளன் , பொற்கொடி , அகிலா ஜ்வாலா , விஜி கிருஷ்ணன்  மந்திர மூர்த்தி அழகு , டி.என் .ராதாகிருஷ்ணன் , தூர்தர்ஷன் கீதா மோகன் , சைபர் கிரைம் விமல் , குவைத் துரைராஜ்  இவர்களோடு நானும் பாட்டி வீட்டு பார்ட்டியில் பங்கேற்கும் பாக்யம் கிடைத்தது.

நெல்லிக்காய் புதினா , பச்சைக் கலர்  ஜூஸ் ,ஆப்பிள் பீட்ரூட் காரட் கலவையில் சிகப்பு கலர் ஜூஸ் எங்களை இனிப்புடன் வரவேற்றது

சூடான மோர்களி+மணத்தக்காளி வடை + உருளை கிழங்கு போண்டா உள்ளே நுழைந்த படி இருக்க சுருக்கமான சுய அறிமுகம் முடிந்தது.

முருங்கைக்காய் சூப் சூடாய் உள்ளே போனதும் கலந்துரையாடலை லேனா சார் தொடங்கி வைக்க .. எழுத்து , பேச்சு , நூல்கள் எழுதுதல் , இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் என கலந்துரையாடல் களை கட்டியது.

இறையன்பு அவர்களின் நினைவாற்றலும் பரந்து விரிந்த படிப்பறிவும் , AI செயலிபோல் கொட்டுகிற தகவல்களும் “இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்திருப்போம் ” என்று பாராட்டத் தோன்றியது.

எல்லோருடனும் படம் எடுத்துக் கொண்டதுடன் .. எல்லோருக்கும் தான் எழுதிய நூல்களையும் கையெழுத்திட்டுப் பரிசளித்த பண்பைப் பார்த்து கண்கள் ஆனந்த கண்ணீர் உகுத்தது.

எத்தனை உயரத்திலிருப்பவர் இத்தனை எளிமையாய் இருக்கிறாரே என்ற வியப்பில் விழிகள் 70 MM  திரையாய் விரிந்தன.

மசால் தோசை , பன் பரோட்டா , வாங்கி பாத் , தயிர் சாதம் ,இளநீர் அல்வா , பாயாசம், அதுக்கும் மேல சுடச் சுட பித்தளை டபரா டம்ளரில் பில்டர் காபி .. என அயிட்டங்கள் வரிசை கட்டி வயிற்றை நிரப்பின.

இதுக்கப்புறம் இங்கேயே படுக்க வேண்டியதுதானா ? என்று இறையன்பு சார் சொன்ன பிறகுதான் அயிட்டங்களின் வரத்து நின்றது.

இது மினி மெனு தான் என்று மடிப்பாக்கம் வெங்கட் சொன்னதும் மெயின் மெனு என்னவாக இருக்கும்  எதற்கும் இரண்டு வயிறு வேண்டும் என்று இறைவனிடம் கேட்டு அது கிடைத்த பிறகு பாட்டி வீட்டுக்கு வரலாம் என்று நான் சொல்ல ராம்ஜியும் ஆடிட்டர் ஜெ.பியும் குலுங்கி சிரிக்க வயிறும் மனசும் லேசானது.

3 மணி நேரம் அறிவு விருந்து வழங்கிய இறையன்பு அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி.

வயிற்றுக்கு விருந்து வழங்கிய என் சி எம் – தயாளன் – மடிப்பாக்கம் கூட்டணிக்கு ஸ்பெஷல் நன்றி  சொல்ல வேண்டும். (அப்பதான் அடுத்த முறையும் என்னைக் கூப்பிடுவாங்க .. ஹி.ஹி)

– உதயம் ராம்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...