போலியோ சொட்டு மருந்து: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்க முடிவு
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் ஒழிப்பு !!
தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிப்பதற்காக, 1994-இல் இருந்து ஆண்டுதோறும், ஜனவரி, மாா்ச் ஆகிய மாதங்களில், இரண்டு தவணையாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு முதல் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக 40 ஆயிரம் முகாம்கள் தான், அமைக்கப்படும். ஆனால், தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால், 50 ஆயிரம் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்படும். இதற்கான பணியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவா்கள் கூறினா்.