தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்

 தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்

தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்

“தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க எனக்கு உரிமை உண்டு “.

உடம்பு இப்படி இருக்கையில் இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்? புதுமைப்பித்தன் சிரித்துக்கொண்டே “எல்லாத்துக்கும் துணிஞ்சி தான் வந்தேன். உணர்ச்சி தான்ப்பா காரணம் . அதோ நிற்கிறாளே அவ நினைப்பு தான் என்னை இங்கே இழுத்து வந்தது” என்று கூறிவிட்டு தினகரியைப் பக்கத்தில் அழைத்து அவள் தலையை அருமையோடு தடவிக் கொடுத்தார்.

“இலக்கிய ஆசை உனக்கு உண்டு இருக்கட்டும். உன் முழு நேர உழைப்பையும் அதற்காக செலவழித்து விடாதே. இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னை கொன்றுவிடும். இலக்கியம் வறுமையைத் தான் கொடுக்கும். அதைப் பொழுதுபோக்காகவே வைத்துக்கொள்.”

“மணியார்டர் வந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் நான் இப்போ எனக்கு வரப்போகிற மணியார்டரைத்தான் எதிர்பார்த்துக் கிட்டிருக்கேன். புரியவில்லையா? சாவைத் தானப்பா நான் மணியார்டர் எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்திருக்கேன்.”

30 .6 .48 அன்று இரவுக்கு பின் உலகுக்கெல்லாம் விடிந்தது ஆனால் புதுமைப்பித்தனுக்கு அன்றிரவு விடியவே இல்லை புதுமைப்பித்தன் காலமானார் ….

“எழுதி எழுதி கையும் வீங்கிற்றே; உயிரும் கொடுத்தாயே! “என்றுதான் கமலாம்பாள் புலம்பினாள்.

புதுமைப்பித்தனின் அந்திம காலத்தைப் பற்றி தொ.மு.சி. ரகுநாதன்

“புதுமைப்பித்தன் வரலாற்றில்” பதிவு செய்து வைத்திருக்கும் குறிப்புகள் இவை.

நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த, வாழ்க்கை முழுதும் போராடியே வாழ்ந்த, அற்ப ஆயுளில் மறைந்துபோன ஒரு சாதனை எழுத்தாளனின் இறுதி நாட்களில் வந்து விழுந்த வலி மிகுந்த வார்த்தைகள் இவை.வாழும்போது தலைமீது வைத்து கொண்டாடப்படவேண்டிய ஆனால் கொஞ்சமும் கண்டுகொள்ளவே படாத ஒரு எழுத்தாளனைக் குறித்து ஒரு சமூகமே குற்ற உணர்ச்சியால் குமைந்து போகும்படியான சொற்கள் இவை.

புதுமைப்பித்தன் மறைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னும் அவருடைய எழுத்துக்களின் வீரியமும் சமகாலத்தை நோக்கி எழுப்பிய கலகக்குரலும் கூர்மையான விமர்சனப் பார்வையும் மேதைமை தங்கிய படைப்பு மொழியும் இன்றைக்கும் உயிர்ப்போடும் புது புது எழுத்தாளர்களை உருவாக்கும் உரத்தோடும் இருக்கிறது. சிறுவயதிலேயே தாயின் மரணம், மாற்றாந்தாயின் கொடுமை , தன் இலட்சியப் பயணத்தைப் புரிந்து கொள்ளாத தந்தையின் புறக்கணிப்பு , பத்திரிகை உலகில் சாதிக்க நினைத்து கிடைத்த ஏமாற்றம்,திருமணமான மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாமலும் உடன் வாழ முடியாமலும் 16 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் பிரிந்தே வாழ்ந்தது, தன் ஆசை மகளை அருகிருந்து வளர்க்க முடியாமல் போனது, சினிமாத் துறைக்குள் நுழைந்து வசனம் எழுத புனேவுக்குச் சென்றவர் காசோடு திரும்பி வருவார் என்று குடும்பம் எதிர்பார்த்திருந்த வேளையில் காசநோயோடு திரும்பிவந்து மரணத்தைத் தழுவியது என்று அவர் வாழ்க்கை முழுவதும் ததும்பி வழிந்த ஏமாற்றமும் சோகமும் வேறு ஒருவராக இருந்தார் பித்துப் பிடிக்கச் செய்திருக்கும் . ஆனால் இத்தகைய வாழ்க்கைச் சூழலிலும் இலக்கியத்தின் மீது பித்துக் கொண்டு கதைகள் , கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கடிதங்கள், திரைப்பட வசனங்கள் என்று குறுகிய வாழ்நாளுக்குள் எந்த எழுத்தாளனும் தொடாத ஒரு உச்சத்தை புதுமைப்பித்தன் தொட்டிருக்கிறார்.

“தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே ஆசிரியர் பெயரையே நூலின் தலைப்பாகக் கொண்டு வெளியிடும் பாக்கியத்தையும் துணிவையும் பெற்ற முதல் கதாசிரியர் புதுமைப்பித்தன் தான்.”

“நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய இலக்கிய முறையிலான வாழ்க்கை வரலாறு ரகுநாதனின் மூலம் புதுமைப்பித்தனுக்கே முதலில் அமைந்தது “என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுகதை மன்னனாக அறியப்பட்ட

இத்தகைய படைப்பாளுமையை மேலும் வாசிக்கவும் விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் அவருடைய சிறுகதைகள் மட்டும் போதுமானவை அல்ல .அவருடைய அனைத்து எழுத்துக்களையும் தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக வாசிக்க வேண்டும்.

அவருடைய அனைத்து எழுத்துக்களையும் காலவரிசையில் திருத்தமான பாடத்தோடும் பாட வேறுபாடுகளும் பதிப்பு நெறிமுறைகளோடும் செம்பதிப்புகளாகக் காலச்சுவடு கொண்டு வந்திருக்கின்றது. “அவனுக்கே பிச்சனானேன்”என்று

புதுமைப்பித்தன் மீது பித்துக் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

1995ஆம் ஆண்டு புதுமைப்பித்தனின் எழுதப்படாத, தொகுக்கப்படாத படைப்புகளை நூலாக்கும் முயற்சியில் “சுமார் 100 பக்கங்கள் வரும் ” என்று அப்போது எதிர்பார்த்து தொடங்கிய முயற்சி 350 பக்கங்களுக்கு மேற்பட்ட நூலாக உருவெடுத்ததன் பின்னுள்ள அவருடைய தேடுதலையும் உழைப்பையும் “அன்னையிட்ட தீ” யின் முன்னுரை விவரிக்கின்றது. புதுமைப்பித்தனின் அச்சேறிய முதல் படைப்பு “குலோப்ஜான் காதலை”முதன்முதலில் காந்தி இதழில் கண்டறிந்து தமிழ்ச் சமூகத்திற்கு வெளிப்படுத்தியவரும் சலபதி அவர்களே.1995இல் அன்னையிட்ட தீ நூல் தொடங்கி 2000 ஆண்டில் புதுமைப்பித்தன் கதைகள், 2002இல் புதுமைப்பித்தன் கட்டுரைகள், 2006இல் புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள், 2016ல் ஆய்வுக் குறிப்புகள் , படங்களுடன் கூடிய புதுமைப்பித்தன் வரலாறு மறுபதிப்பு, என்று தொடர்ச்சியாக புதுமைப்பித்தன் எழுத்துக்களை செம்பதிப்பு என்கிற சொல்லுக்கான வினைத்திட்பத்தோடு கொண்டு வந்திருக்கிறார் சலபதி.

ஒவ்வொரு நூலுக்கும் அவர் எழுதியுள்ள விரிவான முன்னுரையே புதுமைப்பித்தனையும் அவருடைய சமகாலத்தையும் அவர் மீதான விமர்சனங்களையும் புதுமைப்பித்தன் அவற்றை எதிர்கொண்ட முறையையும் அவர் காலத்து படைப்பாளர்களுள் புதுமைப்பித்தன் தனித்து விளங்கிய தன்மையையும் என்று புதுமைப்பித்தனைப் பற்றிய ஒட்டுமொத்த ஆளுமையையும் புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

பிழைப்பு தேடி சென்னை வந்தபோது உணவு வாங்க புதுமைப்பித்தனிடம் வ.ரா இரண்டு ரூபாய் கொடுக்க உணவுக்காகச் செலவழிக்காமல் புத்தகக் கடைகளைத் தேடி மாப்பசான் கதைகள் நூலை வாங்கிவந்து படித்திருக்கிறார். வயிற்றை மறந்து வாசித்திருக்கிறார்.

நான் ஆயிரக்கணக்கில் நூல்கள் வாங்க செலவு செய்யும் பொழுதெல்லாம் புத்தகங்களுக்காக ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேட்பவர்களே புதுமைப்பித்தனை வாசித்துப்பாருங்கள்.

சுடர்விழி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...