நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி – அம்ரா பாண்டியன்
திரையுலக வரலாற்று துளிகள்
நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி
எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ்
சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ்
தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்: “நான் சொல்கிறார் போல, பாராட்டு வரா விட்டால், ‘மேக் – அப்’ போடுவதையே நிறுத்தி விடுகிறேன்!”
ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் நாகேஷ். நாடகத்தில் நடிக்க விரும்பி நாடகங்களை எழுதி இயக்கி வந்த ம.ரா., என்பவரைப் போய்ப் பார்த்தார்.
ஒல்லியான உடம்பு கொண்ட நாகேஷ், அவர் முன் போய் நின்றாரே ஒழிய, அவர் கண்ணுக்கு, தென்படவே இல்லை. மெதுவாக செருமி, ஒரு வழியாக அவர் கவனத்தை ஈர்க்க, ‘என்னய்யா வேணும்…’ என்றார்.’நீங்க, நாடகம் போடறீங்களாமே… அதுல, நடிக்கணும்ன்னு விரும்பறேன்…’ என்றார் நாகேஷ்.’இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா… இந்த காலத்துல, யார் யாருக்கு, நடிக்க ஆசை வரணும்ன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சுப்பா…’ என்றார், இடக்கான குரலில்.
அவர் சொன்னதற்காக, நாகேஷ் கவலைப்படவில்லை.’சார்… எனக்கு நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு… உங்க நாடகத்துல ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுத்தீங்கன்னா போதும், சந்தோஷமா ஏத்துக்குவேன்…’ என்று, கெஞ்சிய குரலில் கேட்டார்.
‘நடிச்ச அனுபவம் ஏதாவது இருக்கா…’
‘இல்லை சார்… ஆனா, ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, அதுல என் திறமையை காட்ட முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கு…’ என்றார் நாகேஷ்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தவர், ‘ம்… ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கு… வயித்து வலிக்காரனா நடிக்கணும்…’ என்றார்.’சரி, சார்!’ என்றார் நாகேஷ்’சின்ன கதாபாத்திரம் தானேன்னு நினைக்க கூடாது. ஒத்திகைக்கெல்லாம் தவறாம வந்துடணும்…’ என்றார்.
மறுநாள் ஆபீஸ் முடிந்து, நாடக ஒத்திகை நடக்கும் இடத்திற்கு போனார் நாகேஷ்.
‘இப்படி உட்கார்… உன், காட்சி வரும்போது சொல்றேன்…’ என்றார், இயக்குனர். அடுத்த, காட்சியில் கூப்பிடுவாரோ என்று, ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்து காத்திருக்க, நாடகம் முடியப் போகிற கட்டத்தில், ‘ம்… வா!’ என்றார்.
‘காட்சியில், டாக்டரம்மா உட்கார்ந்திருப்பாங்க… அவங்க, ஒரு வயித்து வலி நோயாளியை பார்த்துகிட்டு இருக்கும்போது, கதாநாயகன் போய் அவங்களை பார்த்து பேசுகிறார் போல, காட்சி. நீ தான் அந்த வயித்து வலி நோயாளி… உனக்கு பெரிசா வசனமெல்லாம் கிடையாது…
‘டாக்டரம்மா, அடுத்த, நோயாளியை வரச்சொன்னதும், நீ போகணும்… ‘என்ன பிரச்னை…’ன்னு டாக்டர் கேட்க, ‘வயித்து வலி தாங்க முடிலையே…’ன்னு சொல்லணும். அவங்க மருந்து எழுதி கொடுத்ததும், அந்த சீட்டை வாங்கிட்டு வந்துடணும். இது தான் காட்சி. ஒழுங்கா நடிக்கணும்…’ என்று, விளக்கினார், இயக்குனர்.
ஒன்றரை மாதம் ஒத்திகை முடிந்து, நாடக அரங்கேற்றத்துக்கான தேதி குறிக்கப்பட்டது.முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்ற சந்தோஷம்; ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்ற பயம். இப்படி ஒரு கலவையான உணர்வுடன், மேடையின் பக்கவாட்டில், நடிக்க வேண்டிய காட்சிக்காக காத்திருந்தார் நாகேஷ்.
‘அடுத்த பேஷன்ட்…’ என்று டாக்டர் சொல்ல, காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ…’ என்று, நாகேஷைப் பிடித்து லேசாகத் தள்ளினார், இயக்குனர்.’டாக்டர்…’ என்று வீறிட்டு அலறியபடி, மேடைக்குள் நுழைந்தார் நாகேஷ்.
திடீரென்று இப்படி ஒரு வீறிடும் குரலை, எதிர்பார்க்காத பார்வையாளர்கள், சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல, உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்தபடி, டாக்டருக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தார் நாகேஷ்.
‘என்ன உடம்புக்கு…’ என்று டாக்டர் கேட்க, அவர் அதை சட்டையே பண்ணாமல், வயிற்றை பிடித்து, ‘அம்மா…’ என்று துடித்தார். கையில் ஒரு சீட்டு இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினார்.அதை, வாங்குவதற்கு தன் கையை எடுத்து வந்தபோது, சட்டென்று தன் கையை பின்னுக்கு இழுத்து, உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, ‘ம்மா ஆஆஆ…’ என்றார் நாகேஷ்.
மறுபடி சீட்டை கொடுக்க கையை நீட்டினார். டாக்டர், அதை வாங்க, கையை நீட்டியபோது, தன் கையை பின்னால் இழுத்து, ‘அம்ம்மா… அம்ம்மா…’ என்று கத்தினார்.ஒன்றரை நிமிடங்களுக்கு, வித விதமான ஏற்ற இறக்கங்களை குரலில் காட்டி, ‘அம்மா…’ என்று அலறி, துடித்து, கதறினார். ‘யாரடா இவன்… திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே…’ என்று பார்வையாளர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கலந்த அதிசயம்; கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.
முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த, செக்கச் சிவந்த மனிதர், கை தட்டி, தன் நடிப்பை ரொம்பவும் ரசித்ததையும் கவனித்தார் நாகேஷ்.’அட… நம்மகிட்டேயும் விஷயம் இருக்கு போலிருக்கு… இத்தனை ஜனங்களும் எப்படி கை தட்டி ரசிக்கிறாங்க…’
என்ற சந்தோஷம் ஒரு பக்கம், ‘நான் சொன்னதை செய்யாம, நீ பாட்டுக்கு அதிகப்பிரசங்கித்தனமா என்னென்னவோ பண்ணிட்டியே…’ என்று, இயக்குனர் கோபித்து கொள்வாரோ என்ற பயம், இன்னொரு பக்கம்.
காட்சி முடித்து, விண்ணதிரும் கரகோஷங்களுக்கு இடையே வந்தபோது, ‘அட… போனா போகுதுன்னு ஒரு சின்ன கதாபாத்திரம் குடுத்தா, அதுல கூட என்னமா பிச்சு உதறிட்டே…’ என்று, நாகேஷைக் கட்டிப்பிடித்து பாராட்டினார், இயக்குனர்.
நாடகம் முடிந்தவுடன், முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த சிவந்த மனிதர், மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
நாடகத்துக்கு தலைமை வகித்த அந்த நபர், ‘மைக்’கை பிடித்து, ‘நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார், ஒருவர்…
தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில், வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன்…’ என்று சொல்லி, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த, இயக்குனரிடம், ‘அவர் பெயர் என்ன…’ என்று கேட்டார்.
நாகேஸ்வரன் என்று, இயக்குனர் சொல்ல, ‘நாகேஸ்வரன் என்ற பெயருடைய அவருக்கு, நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்…’ என்று சொன்னபோது, நாகேஷால் நம்ப முடியவில்லை.வானில் மிதப்பது போன்ற உணர்வுடன், அவர் கொடுத்த கோப்பையை வாங்கிக் கொண்டார்.
அன்று, அவரைப் பாராட்டி, கோப்பையை பரிசளித்த, செக்கச் சிவந்த, முதல் வரிசை சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர்., தான்.
அதற்கு முன், நாகேஷ், எம்.ஜி.ஆரைப் பார்த்தது இல்லை. எனவே, அவரை அடையாளம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., தனக்குப் பரிசு கொடுத்த போது, அதை வாங்கச் சென்ற நாகேஷ் தன் பக்கத்திலிருந்த இன்னொரு நடிகரிடம், ‘இவரு யாரு?’ என்று கேட்டாரே பார்க்கலாம்!