இக்காலத்தை மிஞ்சும் அக்கால விளம்பரங்கள் – பாண்டியன் சுந்தரம்
அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல!
1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்து புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி.
அந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்தது’ என்கிறது இந்த விளம்பரம்.இந்த மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரைப்பது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன் மனைவி. பெண் சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரி ‘தைரியமான’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன் விலை? அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி!
இது மட்டும்தானா? நிரந்தர தாதுபுஷ்டி டானிக் மருந்து, நரசிங்க லேகிய தங்க பஸ்பம், ஒரிஜினல் தங்கம் சேர்த்த நர்வினஸ் டானிக் மருந்து, ஜீவாம்ருதம், ஸண்டோஜன் (இது உறுப்புகளுக்கு வலிமை தரும் உலோக ஆகாரம் என்கிறது விளம்பர வாசகம்) வெளிப்புறத்தில் உபயோகிக்க கஸ்தூரி லினமெண்டேன், ஒருமுறை பரிக்ஷித்துப் பார்த்துவிட்டுப் பலன் இல்லை என்றால் ‘10000/-’ இனாம் தரத் தயார் என்று சொல்லும் தாது புஷ்டிக்கான ‘பீம – வீர்’ விளம்பரம், நடுத்திர வயதினர் ‘வாலிப வலுவு’ கொள்ளவும், மனைவி, ‘மீண்டும் 20 வயது இளைஞர் போலிருக்கிறீர்களே’ என்று ஆச்சரியப்படவும் கல்ஸானா மாத்திரைகள் (இதனைப் பெண்களும் சாப்பிடலாமாம். சூதகக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்தும் நீங்கி பெண் வலிவும், பொலிவும் பெறுவாளாம்) என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதெல்லாம் படிக்கப் படிக்க ஆண்களுக்கு ‘இது’ ஆதிகாலத்திலிருந்தே பிரச்சனையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.
ஆனால், நமக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது ‘கருங்குரங்கு ரஸாயன’ விளம்பரம்.கருங்குரங்கின் கழுத்தில் உள்ள ஒரு நரம்பை வயதாகித் தளர்ந்த ஒரு மனிதனின் கழுத்து நரம்புடன் சேர்த்தால் அவனுக்கு வாலிப உணர்ச்சியும், உடல் பலமும் உண்டாகுமாம். இது இந்தூர் மஹாராஜா அவர்களுக்குச் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறதாம். கருங்குரங்கின் ஜீவ உறுப்புக்களை மனிதனுடைய உறுப்புகளில் சேர்ப்பது டாக்டரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்கிறது விளம்பரம். சகல வியாதிகளுக்கும் ஓர் கைகண்ட ஔஷதமாம் இது. அக்காலத்தில் ஜீவ காருண்ய சங்கத்தார் எப்படி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி சிருங்கார ரசம் பெருக்கும் விளம்பரங்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் கொசுவலை விளம்பரம், பட்டுப் புடைவை விளம்பரம், பற்பொடி விளம்பரம், இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி விளம்பரம், பிராவிடண்ட் ஃபண்ட் ஃபைனான்ஸ் விளம்பரம், கூந்தல் ஆகார விளம்பரம், நரை மயிர் நீக்கும் விளம்பரம், பெண்களின் சூதகப் பிரச்சினைகளை நீக்கும் கெற்ப சஞ்சீவி எண்ணெய் விளம்பரம், நீலகிரி காபிக் கொட்டை, சகல வியாதிக்கும் மருந்தாகும் ‘மின்சார ரசம்’ (அப்படின்னா என்னவாக இருக்கும்?) கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பச் சொல்லும் ஜோதிட விளம்பரம், நினைத்ததை நிறைவேற்றித் தரும் ‘மாந்த்ரீக மோதிரம்’ (இதன் மூலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாம் தெரிந்து கொண்டு விடலாமாம். ஆவிகளுடனும் பேச முடியுமாம்; ஏன் புதையல் எங்கே இருக்கிறது என்பதைக் கூட இதன் மூலம் கண்டறிந்து விட முடியுமாம்) என்று பல விளம்பரங்கள் அக்காலச் சமூக நிலையைக் காட்டுகின்றன.
இவ்வகை விளம்பர வாசகங்களில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமேயில்லை. ரோமங்களை நீக்கும் ஜனானா கிரீம், வேண்டா ரோமத்தை உடனே நீக்கி சருமத்தை மிருதுவாக்கிப் பாதுகாக்கின்றதாம். பெரிய குடும்பங்களால் உபயோகிக்கப்படும் அதன் பெரிய ட்யூப் விலை 12 அணா. பாட்டிலிலும் கிடைத்திருக்கிறது, விலை 14 அணாதான். சிடுசிடுவென்றிருக்கும் மனைவியை ‘குளு’ ‘குளு’ என்று மாற்ற தினமும் அவளுக்கு ‘குவேக்கர் ஓட்ஸ்’ கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது ஒரு விளம்பரம். ‘கோடைக் காலத்தில் மனைவி அடுப்படியில் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு ருக்மணி குக்கர் வாங்கிக் கொடுங்கள். ஒரு மணி நேரத்தில் சாதமும் ஐந்துவித பதார்த்தங்களும் செய்யலாம்’ என்கிறது இன்னொரு விளம்பரம்.
மேனகா, (1935இல் வெளிவந்த இப்படம்தான் தமிழில் வெளியான முதல் சமூகப் படம்; வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமாயிருக்கிறார்) ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி, சந்திரலேகா, கண்ணகி, பாலாமணி (இதுவும் வடுவூராரின் பிரபல நாவல்தான்; பாரதிதாசன் முதன்முதலில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம்) என்று பெண்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களுக்குக் குறைவே இல்லை. இப்படங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு படம் ‘சிந்தாமணி.’ எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. 1937ல் வெளியாகி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, தமிழில் அதுவரை வெளியான படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெயரைப் பெற்றது இப்படம். (மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ பின்னர் 1944ல்தான் வெளியானது.) சிந்தாமணி படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் கட்டிய திரையரங்கம் தான் ‘சிந்தாமணி’ தியேட்டர்.