1ம் தேதி முதல் FASTag அமல்!
1ம் தேதி முதல் FASTag அமல்!
டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, இதற்கான தனி அடையாள ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்க சாவடிகளை விரைவாக கடந்து செல்ல முடியும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் தமிழகத்தில் இருக்கும், 48 சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் நடைமுறை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சுங்க சாவடிகளை கடக்கும் வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்ட் டேக் ஸ்டிக்கரில் இருந்து வெளிப்படும் ரேடியோ கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் பணம் எடுத்து கொள்ளப்படும். கட்டணம் செலுத்த வாகனத்தை நிறுத்தி காத்திருக்க வேண்டியதில்லை. பாஸ்ட் டேக்குகளை பிரத்தியேக செயலி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் மூலம் பெறலாம்.
வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல், வாகன உரிமையாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள ஆவணம் மற்றும் முகவரிக்கான ஆவணம் ஆகியவற்றினை கொண்டு பாஸ்ட் டேக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பாஸ்ட் டேக்குகளின் குறைந்த பட்ச கட்டணம் 100 ரூபாய் ஆகும். இதுதவிர கார், ஜீப், லாரி என்று வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டு 500 முதல் 900 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிபண்டபிள் கட்டணமாக குறிப்பிட்ட தொகையும், பாஸ்ட் டேக்கில் இருப்பு வைக்க குறிப்பிட்ட தொகையும் பெறப்படும். பாஸ்ட் டேக் அமலுக்கு வர இன்னும் சில நாள்களே உள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில், 15 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை, நவம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரமாகவும், தற்போது நாளுக்கு 50 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.