அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா?

 அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா?

அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுக மீது பாயும் சீமான்!

        சென்னை: அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  ‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், இவ்வாறு பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு. சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது.

     விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

       ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் ‘புலிகளால் ஆபத்து’ என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது. கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

      ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்! திராவிடத்தின் இறுதி நம்பிக்கையெனக்கூறி, குறைந்த பட்ச திராவிடம் இருப்பதாகக்கூறி திமுகவை ஆதரிக்கிற திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான திமுகவின் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...