என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில்

 என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில்

இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’

தமிழ் இலக்கியம்

என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில்

இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’

என்னுடைய பார்வையில்

அம்மா வந்தாள்’

தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம்

அதற்கு முன் நாவலாசிரியர் பற்றி

தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982)[ . ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம்என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்போன்றவற்றை எழுதியவர்.

தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம்மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

அம்மா வந்தாள்’

தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம்

இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் மற்றும் எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை என சொல்லலாம் . அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் மற்றும் சாதாரண வாசகனையும் கவர்ந்துள்ளது

எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளாலேயே ஆன கதை சொல்லும் நேர்த்தியும் வெகு சுலபமாக எவ்வித சிரமமும் கொடுக்காமல் சாதாரண வாசகனையும் மனம் கவரும். வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்த சிக்கலான சம்பவங்களையும் மற்றும் சிந்தனைகளையும் அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் இவரால் சொல்லிவிட முடிகிறது.

அவருடைய அம்மா வந்தாள் நாவல் அவர் எழுதிய நாவல்களில் சிறந்ததும் ஆகும்.

இனி நாவலைப்பற்றி

அப்பு தன் ஏழாம் வயதிலியே தன் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து ஒரு தூரத்து கிராமத்தில், குருகுலம் போன்ற ஒரு வயதான விதவையின் தர்மத்தில் நடைபெறும் ஒரு பாடசாலையில் வேதம் படிக்கப் போய்விடுகிறான். அங்கு அவனுக்கு அங்கே வேதங்களும், ஆசார அனுஷ்டானங்களும் போதிக்கப்படுகிறது.. அங்கு ஏழுவயதிலேயே விதவையாகிவிட்ட ஒரு இந்து என்ற பெண்ணும் அந்த விதவை மூதாட்டியின் ஆதரவில் வளர்கிறாள். விதவைப் பாட்டிக்கு அப்புவிடம் ஒரு தனி பாசம். அதன் காரணமாக, சாதாரணமாக அந்த மாதிரியான ஆசாரம் மிகுந்த வீடுகளில் கிடைக்காத சலுகையோடும் சுதந்திரத்தோடும் அந்த வீட்டில் வளைய வருகிறான். அப்பு பதினேழு வருடங்கள் அந்த வேத பாடசாலையில் வேதங்களும் ஆசார அனுஷ்டானங்களும் படிக்கிறான் . இந்த பதினேழு வருஷங்களும் தன் பெற்றோர்கள் தன்னை மாத்திரம் ஏன் இந்தப் பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்பினார்கள்?. தான் நான்காவது பிள்ளை. மற்ற மூத்த சகோதரகள், சகோதரிகள் எல்லாருக்கும் ஆங்கிலப் படிப்பு கிடைத்திருக்கும் போது தனக்கு மாத்திரம் ஏன் இப்படி என்ற எண்ணங்களில் அவ்வப்போது அவன் மனம் உளைச்சல் படுகிறான் . பாடசாலையில் வளைய வரும் விதவைப் பெண் இந்து தன்னிடம் காட்டும் பாசம், அதை ஏற்பதா, அல்லது மறுத்து ஒதுங்குவதா, என்ற ஊசலாட்டம் வேறு /. வேத பாடசாலைப் படிப்பு முடிந்ததும் அப்பு தன் ஊருக்கு கிளம்பும் போது. இந்து அவனை தன்னைவிட்டுப் போகவேண்டாம் இங்கேயே என்னோடேயே இரு என வற்புறுத்துகிறாள். அப்புவோ நான் தங்களை என் அம்மாவாகவே, வேதங்களைப் போன்ற ஒரு புனித வடிவிலேயே பார்த்து வந்ததாகச் சொல்லி மறுக்கவே இந்துவுக்கு பொறுக்க முடிவதில்லை. உன் அம்மா அப்படி ஒன்றும் நீ நினைப்பது போல புனிதமே உருவானவள் அல்ல, அவளுக்கும் வேண்டிய அளவு வேண்டாத உறவுகள் உண்டு எனவும் என்னையோ வேதங்களையோ அவன் அம்மாவோடு சேர்த்துப் பேசவேண்டாம் என்று தன் சீற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறாள்.

அப்பு 17 வருஷங்கள் கழித்து தன் வீடு திரும்பும்போது அங்கு ஒரு ஆஜானுபாகுவான, மத்திம வயதான ஒரு அழகான பணக்காரன் தன் பழைய காதலியாக அம்மாவைப் பார்க்க வழக்கமாக வந்துபோய்க்கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது தான் அவனுக்குத் தெரிகிறது அவன் தான் தன் அப்பாவுக்குப் பிறந்த கடைசிக் குழந்தை என்றும் அங்கு இருக்கும் அவனுடைய தம்பி தங்கைகள் எல்லாம் தன் தாய்க்கும் அந்த பணக்காரனுக்கும் பிறந்தவர்கள் என்று. இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. தன் அப்பாவுக்கு தெரிந்தும் . அவரும் செய்வதறியாது இவ்வளவையும் சகித்துக்கொண்டு ஒதுங்கி நின்று பார்க்கும், எதிலும் தான் ஒட்டாத சாட்சியாக இருக்கிறார். அப்புவின் அம்மாவுக்கு தன் கடந்த கால பாபங்கள் எல்லாம் தெரிந்தும் வருந்தி வேதனைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை… இந்தப் பாவத்தைக் கழிக்கத் தான் அப்புவை தான் வேதம் படிக்க அனுப்பி வைத்ததாகவும், அவன் ஒரு ரிஷியாகத் திரும்பி வருவான், அவன் கற்ற வேதங்களின் ஒளிப் பிழம்பில் தன் பாபங்களைப் பொசுக்கிக்கொள்ள நினைத்ததாகச் சொல்கிறாள்.

தண்டபாணி(அப்புவின் அப்பா) மகனிடம் சொல்கிறார், பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும் சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும் புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான் என்கிறார். கல்யாணமே செய்யவேண்டியதில்லை என அப்பு சொல்கிறான். கை தப்புசெய்கிறது என்பதற்காக கையை வெட்ட முடியுமா என்கிறார் தண்டபாணி. அலங்காரத்தை கண்டு கொள்வது அப்புவுக்கு ஒரு சுயதரிசனம். அவன் இந்துவிடம் மீள்கிறான். அதை நுட்பமாக புரிந்துகொண்டுதான் அலங்காரம் சொல்கிறாள் ”நீயும் அம்மா பிள்ளைதான்’ என்று.அப்பு திரும்பிச் செல்கிறான். தன் பழைய வேதப் பாடசாலைக்கு மட்டுமல்ல தன்னிடம் பாசமெல்லாம் பொழிந்த இந்துவிடமும் தான்.

தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான்.. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டியை காணமுடியாது. கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது.,. அவருடைய நடை ஒரு குதூகலத்தின் துள்ளல் பனிக்கால காலை நேரங்களில் புல் நுனியில் துளிர்த்து பளிச்சிடும் பனித் துளிகள் போல கண் சிமிட்டும். ஈர்க்கும். அவருடைய வர்ணணைகளும் கதை சொல்லிச் செல்லும் போது இடைபுகுந்து அவர் சொல்லும் சில பார்வைகள், , ஏதோ ஒரு நடப்பு நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுத்தது போல ஒரு உக்கிரத்துடன், யதார்த்த பதிவாக கண்முன் காட்சி தருகிறது . பலருக்கு இந்த வர்ணணைகள் அநாவசியமாக, கதைக்குத் தேவையற்றனவாகத் தோன்றக்கூடும். மேலும் ஜானகிராமனின் எழுத்தில் பாலியல் உறவுகளைப் பற்றியே நிறைய எழுதுவதாக ஒரு பரவலான கருத்து உண்டு. அவரது கதை சொல்லலும் சம்பாஷணைகளும் பாத்திர வார்ப்பும், மிக நுட்பமானவை. கத்தி மேல் நடப்பது போன்றது சறுக்கி விடும் அபாயம் கொண்டவை. கண்ணியத்துக்கும் ஆபாசத்துக்குமான இடைவெளி மிக நுண்ணியதாக இருக்கும். அவர் எழுத்தில் நுட்பமும் மென்மையும் ஆபாசமாக இல்லாமல் . அதை மிக லாவகமாக, தன்னறியாத நம்பிக்கையுடன் கையாளும் திறன் அவருக்கு வாய்த்திருந்தது. அத்தோடு இது சாத்தியமல்ல என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இடங்கள் கூட மிக யதார்த்தமாக, இது நடந்திருக்கக்கூடும் தான் என்று நம்மை நம்பவைக்கும் எழுத்துத் திறன் நம்மை அசத்துகிறது

அந்த குக்கிராமத்தில், ஆசாரம் மிகுந்த வேதம் போதிக்கும் வீட்டில், ஒரு இளம் விதவையும் ஆசாரமான விதவைப் பாட்டியும் இருக்கும் சூழலில் அப்புவும் இந்துவும் பழகும் அன்னியோன்யம் சாத்தியமா . பிராமண குடும்பங்களில் இது சாத்தியமே இல்லை. ஆனால் தி ஜானகிராமனின் எழுத்துத் திறன் நம்மை நம்ப வைக்கும் தந்திரம் செய்கிறது.

, தன் கணவனுக்குப் பிறந்த கடைசி பிள்ளையை வேதம் படிக்க அனுப்பி வைத்து அவன் ஒரு வேதவித்தாகத் திரும்பி வந்தால், தன் பாபங்கள் எல்லாம், இன்னமும் தொடரும் பாபங்கள் எல்லாம் அதில் கரைந்து விடும் என்று அலங்காரத்தம்மாள் எப்படி நம்புகிறாள்? இந்த நாவலில் மிக நெருடலான ஒரு விஷயம்இது

தன் பிள்ளைளை வேதம் படிக்க வைப்பது தன் பாவங்களுக்கான விமோசனம் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

வேதங்கள் என்ன பாவங்களுக்கு அடைக்கலம் தருமா, தன் பாவங்களை அது எப்படி புனிதப்படுத்தும் என அலங்காரத்தம்மாள் நினைக்கிறாள்?

வேதங்களைப் புனிதமாக நினைக்கும் நமக்கு மனதுக்கு இது ஒரு பாவகாரியமாகத்தானே தோன்றுகிறது .

இன்றைய கால கட்டத்தில் அறிவு ஜீவியான ஒருத்தனுக்கு இதில் என்ன மனத்தத்துவ விளக்கங்கள், சமாதானங்கள் சொல்ல இயலும்

தமிழ் எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான கூறு குறித்து ஒரு அவதானிப்பு இந்நாவலிலும் உறுதியாகியது. அவர்களுடைய நுண்ணுணர்வு கண் சார்ந்தது அல்ல,காதுச் சார்ந்தது. இந்நாவலில் தி.ஜானகிராமன் சென்னை ,காவேரிக்கரை இரண்டையும் முழுக்க முழுக்க காது உணரும் சித்திரமாகவே எழுதிக் காட்டுகிறார். காட்சிச் சித்திரங்கள் அதை துணைகொள்கின்றன. உரையாடலும் ஒரு காதுச் சித்திரமே.. காது உணரும் உச்சமாக இசையைச் சொல்லலாம். இப்படைப்பாளிகளிடமிருந்து நம்மால் இசையுலகை பிரித்துப் பார்க்க முடியாது..

‘அம்பாள்’ என்ற ஆழ்படிமம் பற்றி தி.ஜானகிராமன் அழகும் உக்கிரமும் கலந்த பெண். கொல்லும் கவர்ச்சி. அச்சமூட்டும் காமம். அந்த சித்திரங்களை தி.ஜானகிராமன் போலவே மௌனியிடமும் லா.ச.ராவிடமும் காணலாம். அலங்காரம் அந்த பெண் சித்திரங்களில் முக்கியமான ஒன்று. அதுவே அம்மா வந்தாள் நாவலின் வெற்றி

-உமாகாந்த்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...