விசுவின் கலக்கல் பதில்!
ரஜினி, பாலசந்தர், நான்.. எல்லோரையும் விடுங்கள் ‘தில்லு முல்லு’ நிஜத்தில் யாரைத் தூக்கி விட்டதென்றால்?! விசுவின் கலக்கல் பதில்!
யூ டியூபில் வெகு நாட்களுக்குப் பின் இயக்குனர் கம் நடிகர் விசுவின் நேர்காணல் ஒன்றைக் காண முடிந்தது. அவரது திரைப்படங்களைப் போலவே பதில்களும் அட்டகாசமாக இருந்தன.
தமிழ் சினிமாவில் ‘விசு’ இடத்தில் வைத்துப் பார்க்க இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரசிகமனம் அப்படித்தான் சொல்கிறது. மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், தில்லு முல்லு (திரைக்கதை மட்டும்), திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, டெளரி கல்யாணம், வரவு நல்ல உறவு என்று எத்தனை குடும்பப் பாங்கான திரைப்படங்கள்.
நண்பர் ஒருவர் முன்னெப்போதோ வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அலுவலக வேலை காரணமாக ஐந்தாறு மாதங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. அப்போதெல்லாம் பணி முடிந்து அறைக்கு வந்தால் ஹோவென்ற தனிமை உணர்வை விரட்ட அவருக்குத் துணை இருந்தது விசுவின் திரைப்படங்கள் மாத்திரமே என்றார். இதென்னடா புதுக்கதையாக இருக்கிறதே என்று கேட்டால், ஆமாம், எனக்கு தனிமையில் குடும்பத்தின் அருகாமையை உணர விசுவின் படங்களே ஆறுதலாக இருந்தன. என்றார் அவர்.
இப்படி குடும்பத்தை விட்டு விலகி தூரதேசங்களில் தங்க நேர்ந்து விட்டவர்களுக்கு ஒருகாலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட ஆறுதல் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன விசுவின் திரைப்படங்கள்.
சரி, இனி நேர்காணல் விசு பகிர்ந்து கொண்ட விஷயத்துக்கு வரலாம்.
தில்லு முல்லு திரைப்பட அனுபவம் பற்றிய கேள்விக்கு விசுவின் பதில்;
தில்லு முல்லு படத்துக்கான திரைக்கதையை நான் பயந்து கொண்டே தான் எழுதினேன். ஏன்னா, படத்துல இருக்கற ரஜினி வேற, நான் நேர்ல, நிஜத்துல பார்க்கற ரஜினி வேற. அதனால எனக்கு அந்தப் படம் பயமா இருந்துச்சு. அதுல ரஜினிய நடிக்க வைக்கிறது சரியா, இல்லையான்னு சொல்லக்கூடிய உரிமை கூட எனக்கு அப்போ இல்லை. நான் அந்த டிஸ்கஸன்ல சும்மா கவனிச்சிட்டு இருக்கேன். அவ்ளோ தான். அந்தப் படத்தைப் பொருத்தவரை ரஜினி தான் சரிங்கிற முடிவை எடுத்தவர் தி ஒன் அண்ட் ஒன்லி பாலசந்தர். எப்பேர்ப்பட்ட டைரக்டர்! அவர் சொல்லிட்டார். அதெல்லாம் சரியா வரும்டான்னு. அவ்ளோ தான். படம் ஹிட். அந்தப் படம் வெளிவந்தப்புறம் பலருக்கு ஹைக் இருந்தது நிஜம். ரஜினி, பாலசந்தர், நான் எங்க எல்லாரையும் தாண்டி அந்தப் படத்தால பலபடி மேல போனார் நடிகர் தேங்காய் சீனிவாசன். அவருக்கு இந்தப் படத்தால நல்ல ஹைக் கிடைச்சுது. என்னா மாதிரியான ஆர்டிஸ்ட் எல்லாம் அந்தப் படத்துல நடிச்சாங்க! செளகார் ஜானகி அம்மா. அவங்க அந்த பாத்ரூம் குழாயைப் பிடிச்சிட்டு மேல ஏறுவாங்களே, அது ஸ்க்ரீன்ல வந்துச்சே, எல்லாரும் பார்த்திருப்பாங்க. அதை அவங்க நிஜமாவே ஸ்பாட்ல செஞ்சாங்கன்னா பார்த்துக்கோங்க. என்னா மாதிரியான நடிப்பு அது!
இப்படி நேர்காணல் முழுவதுமே விசுவின் பதில்கள் அனைத்தும் அட்டகாசமாக இருந்தன. அதில் இந்த தகவல் பலரும் அறியாதது என்று நினைத்ததால் பகிரத் தோன்றியது. ஏனெனில், தில்லு முல்லுவில் ரஜினிக்கு நிகராக ரசிக்கப்பட்ட நடிப்பில்லையா நடிகர் தேங்காய் சீனிவாசனதும்.