பிப்ரவரி 11,வரலாற்றில் இன்று./ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம்.
பிப்ரவரி 11,
வரலாற்றில் இன்று.
ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம்.
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய “ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம் இன்று (1908).
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.
தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.
தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.
தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.
தமிழ்ப் பணி
1851-ஆம் ஆண்டு இரண்டாவது முறை தமிழகம் வந்தபோது எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் இருந்தார். இந்தக் கால கட்டத்தில் புறநானூறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களைக் கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882-ஆம் ஆண்டு தனது 62-வது வயதில் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885-ல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து அங்கு மாணவர்களுக்குத் தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.
1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
1893-ல் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாலடியார் மொழியாக்கத்துடன் ஆராய்ச்சியோடு கூடிய முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். நாலாடியாரின் பொருளை விரித்து உரைக்கிறார், அத்துடன் நாலாடியாரில் உள்ள வெண்பா, அதன் ஆங்கில வடிவம், இறுதியில் விரிவுரை என அமைத்திருந்தார். இதுதவிர பாட்டு முதற்குறிப்பு அகராதி, சொற்பொருள் அகராதி தவிர நூலின் இறுதியில் பொது அகராதி ஒன்றையும் அவர் தொகுத்து அளித்திருந்தார்.[1]
நாலடியார் மொழியாக்கத்தைத் தொடர்ந்து திருவாசகத்தை மொழியாக்கம் செய்தார். முதுமையிலும் அப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, ஏப்ரல் 24, 1900 அன்று அதை வெளியிட்டார். திருவாசகம் முன்னுரையில் “என் எண்பதாவது பிறந்தநாளில் இதை வெளியிடுகிறேன். 1837-ஆம் ஆண்டில் முதன்முதலில் தமிழ் படிக்கத் தொடங்கினேன். நெடுங்காலம் உண்மையான பற்றுக் கொண்டு தமிழ் நூல்களை ஆராய்ந்தேன். இந்நூல் வெளியீட்டோடு என் இலக்கியப் பணி முற்றுப்பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
போப் திருவாசகம் மொழிபெயர்ப்பு தன் இறுதி இலக்கியப் பணியாக இருக்கக் கூடுமென எண்ணினார். அதன் பின்னர் எட்டாண்டுகள் அவர் வாழ்ந்து மணிமேகலையின் ஆங்கில மொழியாக்கத்தைத் துவக்கினார். அது நிறைவுறவில்லை. அவர் மறைந்த பிறகு அதன் பகுதிகள் ‘சித்தாந்த தீபிகை’யில் வெளியாயிற்று. வாழ்வின் இறுதிக்காலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். புறநானூற்றின் சில பகுதிகளையும் மொழிபெயர்த்தார், அந்நூல் குறித்த கட்டுரைகளையும் எழுதினார்.
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88ஆவது வயதில் (1908) காலமானார்.
இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.
by
Akila