‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’

 ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’

நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்’, ‘இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க வைத்தது. ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’ பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உணர்ச்சிபூர்வமாகப் பாடி அந்தப் பாடலின் ஆன்மாவை நம் மனதுக்குள் செலுத்திய ஜென்ஸியை என்ன சொல்லி பாராட்டுவது?

காதல் ஏக்கத்தில் பாடும் இளம்பெண்ணின் குரலுக்கு அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பெரும்பாலும் ஜென்ஸியின் குரலையே தேர்ந்தெடுத்தார். மிக எளிமையான மெட்டுதான் என்றில்லை. பாடுவதற்கு சிரமமான பாடல்களையும் துணிந்து ஜென்ஸிக்கேக் கொடுத்தார். அப்படி ஒரு சிரமமான மெட்டு, ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் ‘அடி பெண்ணே’ என்னும் பாடல். துவக்கமே உச்சஸ்தாயியில். பின்னர் சரணத்தின் பல இடங்களில் பல ஊர்களுக்குச் சென்று பின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். கொஞ்சம் அசந்தாலும் வண்டி தடம் புரண்டு விடக்கூடிய அபாயமுள்ள மெட்டது. பயமறியா இளங்கன்றாக ஜென்ஸி அந்தப் பாடலை மிகச் சரியாகவே பாடியிருப்பார்.

‘அடி பெண்ணே’ பாடலுக்கு நேரெதிர் திசையிலுள்ள மற்றுமொரு தனிக்குரல் பாடலை ஜென்ஸிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலை, தான் பின்னால் அமைக்கப் போகும் ஓர் அற்புதமான மெட்டுக்கான முன்னோட்ட முயற்சியாக இளையராஜா செய்து பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு. ’அன்னக்கிளி’ இயக்குனர்களான தேவராஜ்-மோகனின் இயக்கத்தில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தின் ’ஞான் ஞான் பாடணும்’ என்ற பாடலை கீரவாணி ராகத்தில் அமைத்த இளையராஜா, பிற்பாடு ‘ஜானி’ திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலை அமைப்பதற்கான யோசனையை, இந்த ‘பூந்தளிர்’ பாடலிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடலை தன் தாய்பாஷையில் பாடியிருப்பதால் பெரிய ‘ற’ சிக்கலில்லாமல் அருமையாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. தான் பாடிய மற்ற தமிழ்ப்பாடல்களைவிட ’ஞான் ஞான் பாடணும்’ பாடலில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரக் குரலில் அவர் பாடியிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். அதுவும் இந்தப் பாடலின் தாளத்தைப் பற்றியும், வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைப்பகுதிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் தனியாக இன்னொரு கட்டுரைதான் எழுதவேண்டி வரும்.

ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விருப்பப் பாடலைச் சொல்வார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள் பலரின் ஓட்டுகளைப் பெற்று Unopposedஇல் ஜெயித்த பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’ திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான். ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’. காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப் பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப் பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். சரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின் வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். ‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ என்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது. நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின் பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன். இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில் புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

பெரும்பாலும் உச்சஸ்தாயியில் பாடும் பல பாடல்களை ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும் ‘அன்பே சங்கீதா’ திரைப்படப்பாடலான ‘கீதா சங்கீதா’ என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதொரு ஜென்ஸியின் பாடல். Under rated பாடகரான ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜென்ஸி பாடியிருக்கும் இந்தப் பாடலை ‘லாலாலலலா’ என்று மழலையாக ஜென்ஸி துவக்குவார். அதைத் தொடர்ந்து ‘கீ . . .தா . . .’ என்று உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடலைத் துவக்கிப் பாடுவார். பல்லவி முடிந்து சரணம் முடியும் போதுதான் ‘கண்ணா’ என்று ஜென்ஸி வந்து இணைவார். கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், பிசிறில்லாமல் ஜென்ஸி துவக்கும் விதத்தையும், ஜெயச்சந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் அடுத்த சரணத்தில் ‘பலஜென்மம் பிறந்தாலும் உன்வாசல் தேடும் உறவல்லவோ’ என்று ஜென்ஸி பாடியிருக்கும் முறையையும் கேட்டுப் பாருங்கள்

– சுகா

நன்றி: சொல்வனம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...