இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணி
இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது.
1. மஸ்தானா, மஸ்தானா
பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய இந்தப் பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய பல பாடல்களோடு ஒப்பிட்டால், இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பான பாடல் இல்லைதான். ஆனால், இந்தப் பாடலில் ஒலித்த பவதாரிணியின் குரல், பாடலை கவனிக்க வைத்தது. அவருடைய குரலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் ரோஜாவும் நடித்திருந்தனர்.
2. நதியோடு வீசும் தென்றல்
1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான திரைப்படம் அலெக்ஸாண்டர். இந்தப் படத்தில் இருந்த சண்டைக் காட்சிகளின் சத்தத்திற்கு நடுவே ஒலித்த இந்த மெல்லிய, அழகான பாடல், பெரிதாக கவனிக்கப்படவில்லை. “நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?” என்ற துவங்கும் இந்தப் பாடலில் உன்னிகிருஷ்ணனும் பவதாரிணியும் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார்கள். வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் புதிதாக ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை கார்த்திக் ராஜா.
3. ஒரு சின்ன மணிக் குயிலு
1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படம் வெளியானது. இப்போது பலரும் மறந்துவிட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் இணைந்து பாடியிருந்தார்கள். கார்த்திக் – கனகா இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார்கள். படத்தின் பெயர் பலருக்கும் மறந்துவிட்டாலும் பாடல் இன்னமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
4. இது சங்கீதத் திருநாளோ
1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான அந்தப் படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்த “இது சங்கீதத் திருநாளோ” பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
5. என் வீட்டு ஜன்னல் எட்டி
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் இது கவனிக்கத்தக்க ஒரு படமாக அமையவில்லை. ஆனால் பவதாரிணியும் அருண் மொழியும் பாடியிருந்த இந்த ஒரு பாட்டு, படத்தின் பெயரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்றது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல் ஹிட்டானது. இப்போதும் எங்கேயாவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சில நொடிகள் பாடலை ரசித்துச் செல்கிறார்கள்.
6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன்
பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து ‘டைம்’ என்ற திரைப்படம் 1999ல் வெளிவந்தது. கீதா கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கியிருந்தார். ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், அம்பிகா, நாசர் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ஆனால், படம் யார் நினைவிலும் தங்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடல், எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம் செய்திருக்கும். வீடியோ காட்சியில்லாமல் பாடலைக் கேட்பது நன்று.
7. மயில் போல பொண்ணு ஒன்னு
2000வது ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் 9 பாடல்கள் பாரதியின் பாடல்கள்தான். ஒரு பாடலை புலமைப்பித்தனும் ஒரு பாடலை மு. மேத்தாவும் எழுதியிருந்தனர். மு. மேத்தா எழுதிய இந்தப் பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல், கேட்போரை மயங்கச் செய்தது. “குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல” என அந்தப் பாடலில் வரும் வரிகளைப் போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல் அது. இந்தப் பாடல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது.
8. தென்றல் வரும் வழியை
2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடிய மற்றொரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் பாடலில் நடுநடுவே வரும் பவதாரிணியின் ஹம்மிங், இந்தப் பாடலில் மற்றும் ஒரு போனஸ்.
9. காற்றில் வரும் கீதமே
ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதைக் கவரக்கூடிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் இரண்டு இடங்களில் பாடியிருப்பார் பவதாரிணி. ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து ஒலிக்கும். தான் பாடிய பாடல்களிலேயே தனது தந்தை இளையராஜாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று என பவதாரிணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார்.
10. தாலியே தேவையில்லை
2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற ‘தாலியே தேவையில்லை’ பாடல் ஒரு சுமாரான பாடல்தான். ஆனால், ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.
பாடல்களைத் தவிர, பல பாடல்களில் பவதாரிணியின் ஹம்மிங் கவனிக்கத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, காதலுக்கு மரியாதை படத்தில் ‘தாலாட்ட வருவாளா..” பாடலிலும் “முத்தே முத்தமா..” பாடலிலும் “தென்றல் வரும் வழியில்” பாடலிலும் இவரது ஹம்மிங் கவனிக்க வைத்தது. உல்லாசம் படத்தில் வரும் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ஹம்மிங் மட்டும் பவதாரணி.
பவதாரிணி தனது பெரும்பாலான பாடல்களை ஹரிஹரனுடன் இணைந்தோ, அருண்மொழியுடன் இணைந்தோதான் பாடியிருந்தார். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, அரவிந்தன் (1997) படத்தில் இடம்பெற்ற “காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்” பாடலும் தேடினேன் வந்தது (1997) “ஆல்ப்ஸ் மலை காற்றுவந்து நெஞ்சில் கூசுதே” பாடலும் கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன.
நன்றி: பிபிசி தமிழ்