500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்” வரலாறு..!

 500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்” வரலாறு..!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது தொடங்கி ராமர் கோயில் திறப்பு விழா வரை 500 ஆண்டுகால வரலாற்றை விரிவாக அலசுவோம்.

1528: பாபர் மசூதி தோற்றம்
கடந்த 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகி, பாபர் மசூதியை கட்டினார். இந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதன் இடிபாடுகளின் மீதே மசூதி கட்டப்பட்டது என்றும் இந்துத்துவாவினர் பிரச்சனையை கிளப்பினர். 500 ஆண்டுகளாக தொடரும் மோதலின் ஆணி வேறாக அமைந்தது இந்த பிரச்சனை

1751: உரிமை கோரிய மராத்தியர்கள்
மராத்தியர்கள் அயோத்தி, காசி மற்றும் மதுராவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்ததாகவும் இதனால் பல சர்ச்சைகள் வெடித்ததாகவும் பாஜக முன்னாள் எம்.பியும் எழுத்தாளருமான பால்பீர் புஞ்சு, தனது “Tryst with Ayodhya: Decolonisation of India” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

1858: நிஹாங் சீக்கியர்கள்
கடந்த 1858 ஆம் ஆண்டில், நிஹாங் சீக்கியர்கள் பாபர் மசூதியை ராமர் கோயிலின் பிறப்பிடம் என்று உரிமை கோரி வழக்கு தொடுத்தனர். இதுதான் அயோத்தி பிரச்சனையில் தொடரப்பட்ட முதல் வழக்காகும். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட நிஹாங் பாபா ஃபகீர் சிங் கல்சா, 25 நிஹாங் சீக்கியர்களுடன் மசூதியின் வளாகத்துக்குள் புகுந்து மசூதியின் இடம் ராமர் பிறப்பிடம் என்று உரிமை கோரியதாக குறிப்பிட்டு இருந்தது.

1885: முதல் சட்ட உரிமை கோரல்
1885 ஆம் ஆண்டில் மசூதிக்கு வெளியே கோயில் கட்ட அனுமதி கோரி நிர்மோகி அகராவின் பூசாரி ரகுபர் தாஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் வழிபட தனித்தனி பகுதிகளை குறிப்பிட்டு வேலி அமைத்தது.

1949: பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைகள்
நாடு சுதந்திரம் அடைந்து 2 ஆண்டுகள் கழித்து கடந்த 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இரவு, பாபர் மசூதிக்குள் இந்துத்துவ அமைப்பினர் குழந்தை ராமர் சிலைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் அவை தோன்றியதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து பாபர் மசூதி நில உரிமை விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.

1950 – 1959: அடுத்தடுத்த வழக்குகள்
இது தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தரப்புகள் வழக்குகளை தொடர்ந்தன. நிர்மோகி அகாரா அமைப்பு பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராமர் சிலைகளை வழிபடும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது. மறுபக்கம் சுன்னி வக்ப் வாரியம் பாபர் மசூதி இடம் தங்களுக்கு சொந்தம் என உரிமைக் கோரி வழக்கு தொடர்ந்தது.

1986-1989: பாபர் மசூதி பூட்டுகள் திறப்பு
1986 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது பாபர் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்டு இந்துக்கள் உள்ளே வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இது ராம ஜென்ம பூமி விவகாரத்தில் முக்கிய புள்ளியாக அமைந்தது. 1990 ஆம் ஆண்டிற்குள் ராமர் கோயிலை கட்டுவதற்கான காலக்கெடுவை விஸ்வ ஹிந்து பரிஷத் விதித்தது.

1990: அத்வானியின் ரத யாத்திரை
நாட்டில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு வழங்கும் முறையை கொண்டு வர அப்போதைய மத்திய அரசு முயற்சித்ததால் ஏற்பட்ட அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என ரத யாத்திரையை தொடங்கினார். தேசிய அளவில் இந்த ரத யாத்திரையால் பதற்றங்கள் ஏற்பட்டன. பல மாநிலங்களில் மத ரீதியிலான மோதல்கள் வெடித்தன.

1992: பாபர் மசூதி இடிப்பு
1992 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை உச்சகட்டத்தை தொட்டது. உச்ச நீதிமன்றத்திடம் அளித்த உறுதிமொழிகளைக் மீறி, இந்துத்துவ கரசேவகர்கள் அயோத்தியில் இன்று கூடி பாபர் மசூதியை இடித்தனர். நாட்டிற்கே கலங்கம் ஏற்படுத்தும் இந்த நிகழ்வில் முன்னாள் இந்நாள் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டதாக பெருமையோடு சொல்லிக் கொள்கின்றனர்.

1993-1994: கலவரங்கள்
பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தன. இதில் ஏராளமான உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு, மசூதியின் இடத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து டாக்டர் இஸ்மாயில் பருக்கி தொடர்ந்த வழக்கில் 1994 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நில கையகப்படுத்தலை உறுதிப்படுத்தியது.

2002-2003: அகழ்வாராய்ச்சி உத்தரவு
2002 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் நில உரிமை வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை பாபர் மசூதி இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தி, மசூதிக்கு அடியில் ஒரு இந்து கோயிலின் எச்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது. இதனை எதிர்த்து மறுபக்கம் சட்டப் போராட்டம் தொடர்ந்தது.

2009-10: லிபரான் அறிக்கை
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, 16 ஆண்டுகள் 399 அமர்வுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியது. அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையைத் தொடங்கியது.

2010: அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு
அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியோருக்கு பிரித்து வழங்க உத்தரவிட்டது. எனினும், இத்தீர்ப்பு மேல்முறையீடுகள் மற்றும் மேலதிக சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டது.

2019: உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, பாபர் மசூதி இருந்த முழு நிலத்தையும் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துக்களுக்கு வழங்கியது. மசூதி கட்டுவதற்கான மாற்று இடத்தையும் வழங்க உத்தரவிட்டது.

2020: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

2024: ராமர் கோயில் திறப்பு
பிரதமர் மோடி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலை நேற்று திறந்து வைத்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழாவை நடத்தினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...