பாடகர் கே. ஜே. யேசுதாஸ் பிறந்த தினமின்று!
மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாக பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும் நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும் சிரமம் நிறைந்த வாழ்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக1940ல் பிறந்த கட்டச்சேரி ஜோஸப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ் என்றழைக்கப்பட்டார்.
தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட அகஸ்டின் ஜோஸப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். அவனது தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால் அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ந்த்தோடு அவனுக்கு இசைப் பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் எல்லாம் நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாக தேர்ந்தேடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக இசையை கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.
மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான மதிப்பெண்களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களை கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்த்தபுரத்தில் உள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் என கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி இல்லாததால் செம்மாங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
குழாய் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வாய்ப்புக்கள் தேடி சென்னையில் கணக்கில்லாத மைல்கள் நடந்து திரிந்ததையும் திறமையில்லாதவர் என பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார். திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அவரது குரலை ஒலிபரப்புக்கு தகுதியில்லாதது என நிராகரித்தது. கடைசியில் ஒருவழியாக 1962ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ஆண்டனி தனது ‘கால்ப்பாடுகள்’ என்ற படத்தில் ஒரு சுலோகத்தின் நான்கு வரிகளைப் பாட வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த அப்படத்தின் முக்கிய பாடகர் கே.பி.உதயபானு. யேசுதாஸின் வசீகரக் குரலைக் கவனித்த எம்.பி.ஸ்ரீனிவாசன் அப்படத்திலேயே ஒரு டூயட் பாடலையும் அவரைப் பாடவைத்தார். யேசுதாஸின் குரல் சினிமா வட்டாரங்களில் உடனடியாக பேசப்பட்டது. அதே வருடத்திலேயே மேலும் 7 படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது! தனது மகன் வெற்றிப்பயணத்தை தொடங்கியிருப்பது பார்த்துவிட்டு 1964ல் காலமானார் அகஸ்டின் ஜோசப்.
நன்றி: சினிமாபிளஸ்