மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா.. தோனியின் சாதனையை சமன் செய்த ஒரே இந்திய கேப்டன்
மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா.. தோனியின் சாதனையை சமன் செய்த ஒரே இந்திய கேப்டன்
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து மாபெரும் சாதனை படைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்திய கேப்டன்களில் தோனி மட்டுமே செய்த சாதனையை, சமன் செய்து சாதித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. அதற்கே சுமார் 13 ஆண்டுகள் ஆகி இருக்கிறது.
2011இல் கேப்டன் தோனி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து இருந்தார். அதன் பின் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இரண்டு முறை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஆடிய போதும் தொடரை சமன் செய்ய முடியாமல் போனது. அதன் பின் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 1 – 1 என சமன் செய்தது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல் இன்னிங்க்ஸில் 55 ரன்களுக்கு ஆல் – அவுட் செய்தது இந்திய அணி. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 153 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அடுத்து 176 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. 3 விக்கெட்களை இழந்து அந்த இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து டெஸ்ட் தொடரை 1 – 1 என இந்திய அணி சமன் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் முதன்முறையாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் ஆடிய நிலையில், தோனியின் 13 வருட சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார்.
கேப் டவுன் மைதானத்தில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதேபோல் இந்த போட்டி வெறும் 104 ஓவர்களில் முடிவடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஒன்றரை நாட்கள் மட்டுமே நடந்த டெஸ்ட் போட்டி என்பதால், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்று ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
வெறும் 642 பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி..136 வருட வரலாற்றை மாத்திட்டாங்க!
136 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 642 பந்துகளில் முடிவடைந்த போட்டி இதுதான். இதற்கு முன்பாக 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி 656 பந்துகளில் முடிவடைந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு முன் 1935ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி 672 பந்துகளிலும், 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 788 பந்துகளிலும், அதே ஆண்டில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதிய ஆட்டம் 792 பந்துகளில் முடிவடைந்தது.