தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா.
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 255 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6சிக்ஸர்களுடன் 212 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
துணைக்கேப்டன் அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3ம் நாளில் 162 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 4ம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸிலும் 133 ரன்களுக்கு சுருண்டது. ஷமி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.