விஜயகாந்த் என்கிற மகா மனிதன்!

 விஜயகாந்த்  என்கிற மகா மனிதன்!

🔥

மதுரை மண்ணின் மைந்தன். காசுபணத்துக்குக் குறைவில்லை. படிப்பில் நாட்டமில்லை. ரைஸ் மில்லை சரிவரப் பார்த்துக் கொண்டாலே நாலு தலைமுறைக்கு வாழலாம். ஆனால் விஜயராஜுக்கு சினிமா ஆசை. நடிக்க வேண்டும் என்று ஆசை. ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம். மதுரைக்கார நண்பன் இப்ராஹிம் ராவுத்தருடன் தலைநகரம் வந்தார் விஜயராஜ். ‘அடடா… நீங்கதான் ஹீரோ’ என்று எந்த சினிமாக் கம்பெனியும் ரத்தினக் கம்பளமெல்லாம் வரவேற்று ஆராதிக்கவில்லை. ‘நீயா… நடிக்கணுமா… ஹீரோவாவா…’ என்று ஏகடியம் செய்து அனுப்பிவைத்தார்கள். பைக்கை எடுத்துக்கொண்டு விர்ரென ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்த விஜயராஜூக்கு, காலம் கைகொடுத்தது. விஜயராஜ், விஜயகாந்த் ஆனார்.

அவர் வாழ்க்கை இனிக்கச் செய்யும் வகையில் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஏ.காஜா இயக்கத்தில் ‘இனிக்கும் இளமை’ படத்தில் நடித்தார். ‘அகல்விளக்கு’ படத்தில் நடித்தார். ‘ஆட்டோ ராஜா’ படத்தில் நடித்தார். ‘தூரத்து இடி முழக்கம்’ படத்தில் நடித்தார். ஆனாலும் எந்தப் படமும் இனிமை சேர்க்கவில்லை. வந்தது. வந்த வேகத்தில் தியேட்டரை விட்டுப் போயின. இதில், ‘ஏதோ ஒரு நினைவுகள்’ பாடல் விஜயகாந்தின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. இளையராஜா தான் இந்தப் பாடலின் மூலம் ரசிகர்களிடம் அவர்களின் மனதில் நிற்கவைத்தார்.

அடுத்து, ‘சங்கத்தில் பாடாத கவிதை’ மிகப்பெரிய ஹிட்டானது. ‘ஆட்டோ ராஜா’ படத்துக்கு இசை சங்கர் – கணேஷ் என்றாலும் இளையராஜாவிடம் சொல்லி, இந்த டியூனைக் கேட்டு, அவரையே பாடவைத்தார்கள். இதுவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆனாலும் விஜயகாந்த் நாயகனாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தச் சமயத்தில், முதலில் படம் கொடுத்து, அது தோல்விப்படமாகி, ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் வெறிகொண்டு வேலை பார்த்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் கண்ணில் விஜயகாந்த் பட்டார். இருவருக்கும் வெற்றி தேவை. இணைந்தார்கள். ‘சட்டம் ஒரு இருட்டறை’ – விஜயகாந்த் வாழ்வில் மிகப்பெரிய வெளிச்சப்பாதையைக் காட்டியது.விஜயகாந்த் போல் புள்ளிவிவர வசனங்களைப் பேச முடியாது என்று இன்றைக்குச் சொல்லுகிறோம். ஆனால் அன்றைக்கு மோகன் உட்பட பலருக்கும் குரல் கொடுத்த எஸ்.என்.சுரேந்தர்தான் இவருக்கும் குரல் கொடுத்தார். ‘தனிமையிலே ஒரு ராகம்’ பாட்டு, விஜயகாந்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது. தொடர்ந்து தனது படங்களில் விஜயகாந்தைப் பயன்படுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அடுத்தடுத்த இயக்குநர்களும் விஜயகாந்தை நாடினார்கள். ஆனால் அன்றைக்கு முக்கிய நடிகைகளாக இருந்த பலரும் ‘விஜயகாந்துடனா… ஜோடியா… வேணாம் சார்’ என்று மறுத்தார்கள். இதற்கெல்லாம் கலங்கிவிடவில்லை விஜயகாந்த். ஹீரோயின் யார், கதை என்ன, படம் எப்படி என்பதையெல்லாம் பார்க்காமல், தன் ஒவ்வொரு படத்திலும் தன் கடும் உழைப்பை, நேர்மையான உழைப்பை, ஆத்மார்த்தமான உழைப்பைக் கொடுத்தார். அந்தக் காலத்தில் ‘மினிமம் கியாரண்டி’… அதாவது முதலுக்கு மோசம் தராத படங்களை எடுப்பவர்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர், எம்.ஏ.காஜா, இராம.நாராயணன் முதலானோர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் விஜயகாந்தை நாடினார்கள். விஜயகாந்த்தை வைத்து அதிக படங்களை இயக்கியது இவர்களாகத்தான் இருக்கும்.

‘விஜயகாந்த் படமா குடும்பப் படமா இருக்கும்’ என்றார்கள். ‘விஜயகாந்த் நல்லா சண்டை போடுறார்ப்பா’ என்றார்கள்.’ ‘விஜயகாந்த் நல்லா நடிக்கிறார்பா’ என்றார்கள். ‘விஜயகாந்த் யாரையும் காப்பியடிக்காம நடிக்கிறார்யா’ என்றார்கள். இவையெல்லாம் ரசிகர்கள் மனதில் இருந்து வந்த கருத்துகள். ‘விஜயகாந்தா… கொடுத்த சம்பளத்தை வாங்கிக்குவாருப்பா’, ‘விஜயகாந்தா… பாக்கி சம்பளம் வைச்சிருந்தாலும் கேக்க மாட்டாருய்யா’, ‘விஜயகாந்தா… கால்ஷீட் சொதப்பமாட்டாருய்யா’, ‘விஜயகாந்தா… வசதியே இல்லாத ரூம் கொடுத்தாக்கூட அனுசரிச்சுப் போயிருவாருப்பா’ என்றெல்லாம் திரையுலகில் விஜயகாந்த் பற்றிய பேச்சு வந்துகொண்டே இருந்தது. நாலாபக்கமிருந்தும் இயக்குநர்கள் தேடி வந்தார்கள். ஆக்‌ஷன் கதைகளுடன் வந்தார்கள். தூங்குவது குறைந்து, நடிப்பது அதிகமாகிவிட்டிருந்தது. நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்தான், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். நண்பனின் ஒவ்வொரு அடி வளர்ச்சியையும் கண்டு பெருமிதம் கொண்டார்.

‘விஜயகாந்தை வச்சுப் படமெடுத்தா, முதலுக்கு மோசம் இருக்காது’ என்றொரு நிலை வந்தது. ‘மினிமம் கியாரண்டி’ என்று பேசப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அதிக லாபம் கிடைத்தன. வருடாவருடம் விஜயகாந்தின் மார்க்கெட் உயர்ந்துகொண்டே போனது. ’செந்தூரப்பூவே’, ’பூந்தோட்ட காவல்காரன்’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘மாநகரக் காவல்’, ’சின்னக்கவுண்டர்’, ‘சத்ரியன்’, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’, ‘வல்லரசு’, ‘ரமணா’, ‘வானத்தைப் போல’ என நினைவில் நிற்கும்படியான படங்கள் இன்னும் ஏராளம்.

இதேசமயத்தில், விஜயகாந்த் எல்லோருக்கும் உதவுபவர் என்கிற பேச்சும் திரைவட்டாரத்தில் வந்தது. கல்யாணம், கல்விச் செலவு, ஆபரேஷன், கடை வைக்கணும், கடன் அடைக்கணும் என ஒவ்வொரு விதமான பிரச்சினைகளுடன் விஜயகாந்தைத் தேடி வந்தார்கள். சினிமாவில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி அவரே கேட்டறிந்தார். இந்தப் பக்கம் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி, அந்தப் பக்கம் அப்படியே உதவி செய்வார்

“விஜயகாந்த் தம்பியை வைச்சு ‘அன்னை என் தெய்வம்’ படத்தைத் தயாரிச்சேன். ’நீங்க கொடுக்கறதைக் கொடுங்க’ என்றார். கம்மியாத்தான் கொடுத்தேன். ‘ஆனா, பணத்தை நான் கேக்கும்போது கொடுக்கணும்’ என்று சொன்னார். அப்படி அவரிடம் உதவி கேட்டு யாராவது வந்திருக்கும்போது சம்பளப் பணத்தைக் கேட்பார். அதிலிருந்து ஒரு தொகையைக் கொடுப்பேன். இப்படி வாங்கி அப்படி உடனே உதவி செய்வார்.இப்படித்தான் அந்தப் படத்தில் நடித்த தொகை முழுவதையும் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். விஜயகாந்த் மாதிரி ஒரு மனுஷனை இதுவரை நான் பாத்ததே இல்ல’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் நடிகை வடிவுக்கரசி.

’அணையா விளக்கு’ என்று சொல்வோமே..! அதேபோல் விஜயகாந்த் வீட்டில் ‘அணையா அடுப்பு’ எரிந்துகொண்டே இருக்கும். சமைத்துக்கொண்டே இருப்பார்கள். யார் யாரோ வந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அன்றைக்கு நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தவர்களும் இயக்குநராகும் கனவில் கோடம்பாக்கத்தைச் சுற்றிக்கொண்டிருந்தவர்களும் சாப்பிடாமல் பல நாட்கள் இருந்த நிலையெல்லாம் மாறி, ‘விஜயகாந்த் வீட்டுக்குப் போனா வயிறாரச் சாப்பிடலாம்’ என்று வந்தார்கள். இன்றைக்குப் பிரபலங்களாகியும் கூட, நன்றியுணர்வுடன் இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

திரைப்படக் கல்லூரி என்று இருப்பதே விஜயகாந்த் மூலமாகத்தான் நமக்கும் திரையுலகுக்கும் தெரியவந்தது. முழுக்கமுழுக்க திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு கதையுடன் வர, அதில் சிறிய வேடத்தை சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக, கேரக்டரை இன்னும் பெரிதாக்க, முகம் சுளிக்காமல் இரவு பகல் பார்க்காமல் நடித்துக் கொடுத்தார். அது இன்று வரைக்கும் மிகப்பெரிய படமாக, மறக்கமுடியாத படமாக இருக்கிறது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு விஜயகாந்த் திறந்துவிட்ட அந்த வாசல் மூலம், ஏராளமான கலைஞர்கள் அங்கிருந்து வந்து, வெற்றிக்கொடி நாட்டினார்கள். திரையுலகில் பலரும் வாய்ப்பு கொடுக்க முன்வந்தார்கள். அவர்கள் மீது எல்லார் பார்வையும் விழுவதற்குக் காரணம்… விஜயகாந்தின் ‘ஊமைவிழிகள்’.

விஜயகாந்த் என்றால் ஆக்‌ஷன். விஜயகாந்த் என்றால் மதுரைத் தமிழில் பேசுகிற வசனங்கள் என பல ப்ளஸ் பாயின்டுகள் உண்டு. ஆனால், அதிகம் பேசவைக்காமல், சண்டையெல்லாம் பெரிதாகப் போடச் செய்யாமல், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ‘வைதேகி காத்திருந்தாள்’ தந்த தாக்கம் இன்னமும் மறக்கவில்லை. தொடர்ந்து பல படங்கள் இந்த ஜோடி இயங்கியது. கே.ரங்கராஜ் ஒரு பக்கம், மணிவண்ணன் ஒருபக்கம், மனோபாலா ஒருபக்கம் என்று விஜயகாந்தை எண்பதுகளில் பயன்படுத்தாத இயக்குநர்களே இல்லை.

அதேபோல், புதிய இயக்குநர்களை, புதிய தயாரிப்பாளர்களை விஜயகாந்த் போல் அறிமுகம் செய்தவர்களும் எவருமில்லை. தமிழ் சினிமாவில் வைதேகி காத்திருந்தாள் ‘வெள்ளைச்சாமி’ மாதிரி தனிமுத்திரை பதித்தார். அதிக அளவு போலீஸ் கேரக்டரில் நடித்து வெரைட்டியும் காட்டினார். காலால் அடித்து உதைத்து இவர் சண்டையிடும் லாவகம், இதுவரை தமிழ் சினிமா கண்டிராதது.

அலட்டிக்கொள்ளாத நடிப்பு, இயல்பான முகபாவனைகள் விஜயகாந்தின் பலம். குரலில் துக்கத்தைப் பேசுகிறபோது வலியைத் தருவார். ஆவேசத்தில் பல்கடித்து, நாக்கு துருத்திப் பேசும் போது அனலாகிவிடுவார். வேஷ்டியுடன், நவநாகரிக உடையுடன், ஜாலி கேலி இளைஞராக, கொஞ்சம் முதிர்ச்சியான கேரக்டராக, போலீஸாக, காதலனாக, அன்புக் கணவனாக என எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் எந்த நடிகரின் சாயல் இல்லாமல் விஜயகாந்த் நடித்ததுதான் அவரின் தனித்துவம்!

ஒருபக்கம் கம்யூனிஸ சித்தாத்தங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள், இன்னொரு பக்கம் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கிற கதாபாத்திரங்கள், நேர்மையான கதாபாத்திரங்கள், ஊருக்கு நல்லது செய்யும் கிராமத்துக் கேரக்டர்கள் என எல்லாப் பக்கங்களிலும் புகுந்துபுறப்பட்டு தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைச் சேர்த்தார்.இந்தச் சமயத்தில் கமல், ரஜினிக்கு அடுத்து மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராக உயர்ந்தார். வந்த படங்களெல்லாம் ஹிட்டாகின. ஐம்பது நாள், நூறு நாள், வெள்ளிவிழாப் படங்கள் என வரிசையாக வந்தன. ஆர்.கே.செல்வமணி இயக்கிய முதல் படமான ‘புலன் விசாரணை’ மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், விஜயகாந்துக்கு இணையாக சரத்குமாரும் சண்டையிட்டிருப்பார். ‘அது அப்படி இருந்தாத்தான் நல்லாருக்கும், கட் பண்ண வேணாம்’ என்றார் விஜயகாந்த். அந்தப் படம் சரகுமாருக்கும் புதியதொரு அடையாளத்தைக் கொடுத்தது. விஜயகாந்த் திருமணம் அப்போதுதான் நடந்தது. பரிசுடன் வந்தார் ஆர்.கே.செல்வமணி. ‘யோவ்… நீதான் கல்யாணத்துப் பரிசு கொடுத்துட்டியே’ என்று ‘புலன் விசாரணை’ படத்தைப் பரிசாகவே பார்த்தார் விஜயகாந்த். புரட்சி வசனங்கள் பேசிய விஜயகாந்துக்கு ‘புரட்சிக்கலைஞர்’ பட்டம் போட்டார்கள். கலைஞரின் கதை வசனத்தில் நடித்தார். மார்க்கெட் வேல்யூ எகிறிக்கொண்டே போனது.

100-வது படம் வந்தபோது விஜயகாந்த், தமிழ் சினிமாவின் ஆளுமை எனப் பேரெடுத்தார். செகண்ட் ரிலீஸ் தியேட்டர்கள், டூரிங் தியேட்டர்கள் அப்போது இருந்தன. அங்கே சம்பளம் கொடுக்க முடியாமலும் கரன்ட் பில் கட்டமுடியாமலும் இருக்கும்போது முன்பெல்லாம் எம்ஜிஆரின் படங்களை மூன்று நாள் போட்டால் அந்த மாதப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று படங்களைப் போடுவார்கள். அந்த இடத்துக்கு விஜயகாந்த் படங்கள் வந்தன. எல்லா சென்டர்களிலும் ரசிகர்கள் இருந்தார்கள். ‘சி’ சென்டர் ஏரியாவில், தெருவுக்கு ஒரு ரசிகர்மன்றம் அமைத்தார்கள். படம் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தன.

மீண்டும் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்தார். ’’இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லாரும் ‘ஷோலே’ அம்ஜத்கான் போல மிரட்டிருக்காருன்னு மன்சூர் அலிகானைச் சொல்லணும்” என்றார் விஜயகாந்த். அவருக்கென காட்சிகள் அதிகமாகவே ஒதுக்கப்பட்டன. ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற அந்தப் படம் அடைந்த வெற்றி, அளவிட முடியாத வெற்றி. சிவகுமாரை அடுத்து, கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் என்று எவருக்கும் இல்லாத வகையில் 100-வது படம் ஹிட்டடித்தது, மிகப்பெரிய டிரெண்ட் செட்டிங் படமானது.

இப்ராஹிம் ராவுத்தரைத் தயாரிப்பளராக்கி நிறைய படங்களை எடுத்தார். நிறைய இயக்குநர்களை இயக்கினார். அன்றைக்கு ‘நடிக்கமாட்டேன்’ எனச் சொன்ன எல்லா ஹீரோயின்களும் அவருடன் நடிக்க முன்வந்தார்கள். நடித்தார்கள். பணம் அளவுக்கதிகமாக சேர்ந்துகொண்டே வந்தது. அப்படிச் சேரும்போது, அவர் செய்யும் உதவியும் இன்னும் அதிகரித்தது.(கட்டிங் கண்ணையா)

“என் பொண்ணுக்கு டாக்டர் படிக்கணும்னு ஆசை. ஆனா கிடைக்கலை. பணமும் இல்ல. அதைத் தெரிஞ்சிக்கிட்டு விஜயகாந்த் சார் வீடுதேடி வந்தாரு. கையோட என்னை அழைச்சிட்டுப் போனார். உடனே சீட் வாங்கிக் கொடுத்தார். இன்னிக்கி என் பொண்ணு டாக்டர். அதுக்குக் காரணம் விஜயகாந்த் சார்தான். கேப்டன் மாதிரி ஒருத்தரை வாழ்க்கைல பாக்கறது அபூர்வம்’’ என்று நெகிழ்ச்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் குறிப்பிட்டார் கஸ்தூரி ராஜா.

எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்ட ரசிகர் மன்றங்கள், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் செய்யப்பட்ட உதவிகள், எந்த பயமுமின்றி செயல்பட்ட துணிச்சல், எப்போதும் எல்லாத் தருணங்களிலும் இருந்த நேர்மை… என விஜயகாந்த், விஸ்வரூபமெடுத்து தன்னை உலகுக்கே காட்டினார். நடிகர் சங்கத் தலைவரானார். அப்போது செய்த ஒவ்வொரு செயலையும் திட்டத்தையும் காலத்துக்கும் சொல்லி பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

கலைஞர் மீது அன்பு, மூப்பனார் மீது மரியாதை என இரண்டுவிதமாகவும் இருந்த விஜயகாந்த், ஒருகட்டத்தில் கட்சியைத் தொடங்கினார். ரசிகர்கள் தொண்டர்களானார்கள். அரசியலிலும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் எனும் அந்தஸ்துக்கெல்லாம் வந்தார்.தற்போதைய அரசியல் நிலைப்பாடு, முக்கியமாக அவரின் உடல்நிலை என பல காரணங்களால், சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. நிஜத்திலும் எப்போதும் நடிக்காத விஜயகாந்த், அப்படியே இருந்தார்.

‘யார் வந்து கேட்டாலும் இல்லேன்னு சொல்லாம கொடுத்துக்கிட்டே இருக்கீங்கண்ணே. அவங்க சொல்றது நிஜமா பொய்யானு விசாரிச்சிட்டுக் கொடுக்கலாம்ணே’ என்று உடனிருந்தவர்கள் உதவி செய்யும் விஜயகாந்திடம் ஒருமுறை சொன்னார்கள்.

அதற்கு அவர்… “எங்கிட்ட காசு இல்லேன்னு கை நீட்டிக் கேக்கறது எவ்ளோ பெரிய கொடுமை. நம்மகிட்ட வந்தா அது கிடைக்கும்னு அவங்க நினைக்கறது எவ்ளோ பெரிய நம்பிக்கை. அவங்க சொல்றது நிஜமா பொய்யா… எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். நம்மளை நம்பி வர்றவங்களுக்கு நாம கொடுக்கணும். கொடுத்துக்கிட்டே இருக்கணும். அதான் இந்த ஒலகத்துல நாம மனுஷனாப் பொறந்ததுக்கான அர்த்தம்யா” என்றாராம் விஜயகாந்த்.

வாழ்வில் நாம் சந்திக்கிற மனிதர்களில் மாமனிதர்கள் மிகமிகக் குறைவு. விஜயகாந்த் அப்படியொரு மகா மனிதன்!

From The Desk of கட்டிங் கண்ணையா!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...