கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

 கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?

பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவாராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் இந்தத் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது.

பிசிசிஐ-யில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க நீதிபதி லோதா தலைமையிலான குழுவை அமைத்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வாகம் செய்ய ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வுக்கு க்ரீன் சிக்னல் காட்டியது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ-யின் தேர்தல்களும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் பிரிஜேஷ் படேலை களமிறக்கி அவரை வெற்றி பெற வைக்கும் பணிகளில் இறங்கினார் தமிழகத்தின் ஸ்ரீநிவாசன். பிசிசிஐ-யில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எப்படியும் பிரிஜேஷ் படேலை தலைவராக்கி விடுவார் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலியின் பெயரும், பிசிசிஐ தலைவர் பதவிக்கு அடிபட்டது. கங்குலிக்காக களமிறங்கி, அவரை தலைவராக்கும் செயல்களில் இறங்கினார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர். 

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஸ்ரீநிவாசன் கடந்த சனிக்கிழமை சந்தித்ததாகவும், அதே நாளில் கங்குலியும் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று மும்பையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிசிசிஐ-யின் அனைத்து உறுப்பினர்களும் அதிகாரபூர்வமற்ற சந்திப்பில் ஈடுபட்டனர். இந்தச் சந்திப்பின்போது புதிய பொறுப்புகள் நிரப்பப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

ஸ்ரீநிவாசன் முன்னிறுத்திய பிரிஜேஷ் படேலுக்குப் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு காட்டியதோடு கங்குலிக்கு க்ரீன் சிக்னலும் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் பிசிசிஐ தலைவருக்கான போட்டியிலிருந்து பிரிஜேஷ் படேல் விலகும் முடிவில் இருப்பதாகவும், அவர் ஐபிஎல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று கங்குலியைத் தவிர வேறுயாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத பட்சத்தில் கங்குலி ஒருமனதாக தேர்தல் இல்லாமல் பிசிசிஐ-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பிசிசிஐ-யின் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அருண் துமால் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார்.

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “தலைவர் பதவிக்கான ரேஸில் படேல் பெயர்தான் முன்னணியில் இருந்தது. அவருக்காக ஸ்ரீநிவாசன் பிரசாரம் செய்து வந்தார். ஆனால், பல்வேறு மாநில கமிட்டியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் கங்குலியின் பெயர் முன்மொழியப்பட்டது. 10 மாதங்கள்தான் கங்குலி தலைவர் பொறுப்பில் இருப்பார், எனினும் அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தை திறம்பட நடத்திய அனுபவம் கொண்டவர். அதனால் கங்குலி தேர்வாவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கடந்த 33 மாதங்களாக நீதிமன்றம் நியமித்தக் குழுவால் கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இது அனைத்தையும் குறைந்த காலத்தில் கங்குலி சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மும்பையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பிசிசிஐ-யின் ஐசிசி பிரதிநிதி தேர்வு தொடர்பாக விவாதிக்கப்படவில்லை எனவும் அந்தப் பதவி அடுத்த மாதம் நிரப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...