ஒரு பிரிண்ட் கூட இல்லாமல் காணாமல் போன படம்!
வீணை எஸ். பாலசந்தரின் தரமான க்ரைம் த்ரில்லர்
தனது படங்களின் மூலம் ஒரு வித தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தகூடிய வீணை எஸ். பாலசந்தர் கைதி படத்தை விறுவிறுப்பான த்ரில்லர் பாணி கதையமைப்பில் உருவாக்கியிருந்தார். 1950 காலகட்டத்தில் வந்த சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் எனவும் இவரது படம் பெயரெடுத்தது
தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்திலேயே தனது வித்தியாசமான படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட வீணை எஸ். பாலசந்தர்
இதிகாசம், மெலோ டிராமா கதைகளை மையப்படுத்தி வந்த தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதைகளின் மூலம் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அப்படி அவரது இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கைதி.
கைதி என்றாலே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019இல் வெளியான படம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் 1951இல் கைதி என்ற டைட்டிலில் வீணை பாலச்சந்தர் இயக்கி, நடித்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பி ஹிட் படமானது.
ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு முதலில் ரத்தம் என்ற பெயர் வைத்தார்கள். இதையடுத்து ஜூபிடர் பிக்சர்ஸின் ரத்தம் விரைவில் வெளிவருகிறது என்று விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை உணர்ந்த பின்னர் படத்துக்கு கைதி என்று தலைப்பை மாற்றியுள்ளனர்.
படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் வீணை பாலசந்தர், எஸ்ஏ நடராஜன், எஸ் ரேவதி, எம்ஆர் சந்தானம் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
செய்யாத கொலைக்காக குற்றவாளியாக ஜெயில் செல்லும் வீணை பாலசந்தர் அங்கிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியையும், அதற்கான காரணத்தையும் கண்டறிவதுதான் படத்தின் ஒன்லைன்.
இந்த கதைக்கு சஸ்பென்ஸுடன் கூடிய தனது விறுவிறுப்பான திரைக்கதையால் பார்வையாளர்கள் கட்டிப்போட்டிருப்பார் வீணை பாலசந்தர்.
அமெரிக்க படமான டார்க் பேசேஜ் என்ற படத்தை மையைப்படுத்தி கைதி படத்தின் கதையும், காட்சிகளும் அமைந்திருக்கும். பொதுவாக வீணை பாலசந்தர் தனது படங்களுக்கு அவரே இசையமைத்திருப்பார். அந்த வகையில் கைதி படத்துக்கும் அவரே இசையமைத்திருப்பார்.
ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவில் தொலைந்து போன படமாக உள்ளது. தமிழில் வெளியான சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் என பெயரெடுத்த இந்த படத்தின் பிரிண்ட் ஒன்று கூட இல்லாமல் உள்ளது. கார்த்தி நடித்த கைதி படத்துக்கு முன்னரே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய வீணை எஸ் பாலசந்தரின் கைதி வெளியாகி இன்றுடன்(23/12/2023 )72 ஆண்டுகள் ஆகிறது.