நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு
நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு
‘சக்சஸ்’ என்ற வசனத்தில் தொடங்கி கலை உலகின் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய, நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரையுலக பயணம் குறித்த செய்தி…
வீரபாண்டிய கட்டபொம்மன்…பாரதியார்….வ.உ.சி… இவர்களை பற்றி நாம் புத்தகத்தில் படித்திருந்தாலும், இவர்களது முகங்களை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி கணேசன் தான். அந்தளவுக்கு தாம் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். மேடை நாடகங்களில் நடித்து வந்த கணேசன், வசனத்தாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களை கவரத் தொடங்கினார். ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்த கணேசனின் நடிப்பை, வியந்து பாராட்டினார் தந்தை பெரியார். கணேசனின் நடிப்பை பாராட்டி ‘சிவாஜி’ என்ற அடைமொழியுடன் அழைத்தார் பெரியார்.
தமிழ்த் திரையுலகில் பராசக்தி படத்தின் மூலம் தடம் பதித்தார் சிவாஜி கணேசன். சக்ஸஸ் என்ற வசனத்துடன் அடியெடுத்து வைத்த அவர், நடிப்பால் ரசிகர்களின் வெகுவான பாராட்டுக்களை பெற்றார். கருணாநிதியின் வசனங்களை சிறிதும் பிசிறில்லாமல் பேசி, சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு முதல் படத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார். தமிழ் திரையுலகில் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த பராசக்தி படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால், சினிமா வாய்ப்புகள் சிவாஜியின் வீடு தேடி குவிந்தன.
சிறந்த நடிப்புடன் தெளிவான உச்சரிப்பும், கம்பீரமான பேச்சும் சிவாஜிக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், மனோகரா, கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் உள்ளிட்ட படங்கள் இதற்கு சான்றாக அமைந்தன.
சம காலத்தைய நடிகைகளான பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி ஆகியோருடன் சிவாஜி நடித்த அனைத்து படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக சாவித்ரியுடன் நடித்த ‘பாசமலர்’ படம் அண்ணன் – தங்கை பாச காவியமாக அமைந்தது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆருடன் இணைந்து கூண்டுக்கிளி என்ற படத்திலும் நடித்தார் சிவாஜி. தமிழ் திரையுலகின் இருதுருவங்களான எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி.
1980ம் ஆண்டுகளில் வெற்றி நாயகிகளாக திகழ்ந்த அம்பிகாவும், ராதாவும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தனர். சிவாஜியுடன் ஜோடியாக நடிப்பதை தங்களுக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கதாநாயகிகள் கருதினர்.
நடிப்பு ஒருபுறம் இருக்க அரசியலில் களம்காண ஆர்வம் கொண்டார் சிவாஜி. 1988ம் ஆண்டு, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், சினிமாவைப் போல் அரசியல் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
அரசியல் வெற்றியை தராவிட்டாலும், சினிமா வாய்ப்புகள் சிவாஜியை விடவில்லை. 1992ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில், யதார்த்தமான வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
விஜயின் ஒன்ஸ்மோர் படத்திலும் சிறந்த நடிப்புக்கான முத்திரையை பதித்தார். கடைசியாக ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்தார். சிவாஜியின் கலை உலக சேவையை பாராட்டும் விதமாக, கடந்த 1997ம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கரவுவித்தது.
திரையுலகிற்கு நித்தம் புதுமுகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவர்களுக்கு சிவாஜி ஒரு பயிற்சி புத்தகம் என்றால் அது மிகையல்ல.