சித்தர்களின் சிந்தனைகள்
சித்தர்களின் சிந்தனைகள் :
=========================
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே.
– திருமூலர்
இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள்.
நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு
காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உணர்கருவிகள்
மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசணை, கேட்கும்
உணர்வுகளில் மனமானது மயங்கி, மீண்டும் மீண்டும்
அவைகளை உபயோகப்படுத்தி உடலுக்கும் உள்ளத்திற்கும்
துன்பத்தை அளிப்பதோடு கருமையத்தையும் களங்கப்
படுத்திவிடுகிறது. இதனாலேயே நமது முன்னோர்கள்
இந்த ஐந்தையும் அடக்கவேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் உடல் மன இயக்கத் தேவைகள் இருக்கும்வரையில்
இவைகளை அடக்கமுடியாது. அப்படியானால் என்ன செய்வது ?
புலன்கள் வழியே செயல்படும் மனதை மீட்டு அதை புலன்களை வழிநடத்தும் மனதாக மாற்ற வேண்டும். இம்மன வலிமையால்
புலன்களை முறையாக தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி
பிற நேரங்களில் அமைதிபடுத்தவேண்டும். ஏனெனில் அமரர்
எனப்படும் தேவர்களால்கூட இவைகளை அடக்கமுடியாது.
அப்படி இவைகள் அனைத்தையும் இயக்கவில்லை எனில்
அது உயிரற்ற ஜடப்பொருளாக மட்டுமே இருக்கமுடியும்.
எனவே ஐம்புலன்களை அடக்காமல் அளவறிந்து தேவைக்கு
மட்டும் பயன்படுத்தும் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இதையே திருமூலர் நமக்கு இக்கவிதை மூலம் தெளிவுபடுத்துகிறார்.