வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்

 வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்

நயன் தாராவின் 75ஆவது படமாக உருவாகியிருக்கும் அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழின் டாப் நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. தனது கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்த அவர் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் தனது பாதையில் குறியாக இருந்து பெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் ரோலில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்துவருகிறார்.

முதல் இன்னிங்ஸில் இரண்டு காதல் முறிவுகளை சந்தித்த அவர் அடுத்த இன்னிங்ஸில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அவரை காதலித்தார். இருவரும் கடந்த வருடம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நயன்.

முக்கியமாக அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி தந்தார். அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் நயனும் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கும் சிறப்பான வரவேற்பே கிடைத்திருக்கிறது. அவரது ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் திரையுலகம் இன்னும் சில படங்களில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழிலும் அவர் பிஸியாகவே இருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படம் தமிழில் கடைசியாக வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் இல்லாமல் அன்னபூரணி, மண்ணாங்கட்டி ஆகிய படங்களிலும் நடிக்கிறார் நயன். இதில் அன்னபூரணி திரைப்படம் அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னபூரணி படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியிருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் நயன் சமையல் கலைஞராகும் ஆசையில் இருப்பதையும் அதற்கு வரும் எதிர்ப்புகளையும் மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் பூர்ணிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கிறார். அன்னபூரணி படம் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...