ஆதிச்ச நல்லூர் நிலை என்ன

 ஆதிச்ச நல்லூர் நிலை என்ன

ஆதிச்ச நல்லூர்  நிலை என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதிச்சநல்லூர்

பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள்.

அரசுகளின் கவனமின்மை’தமிழக அரசால் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் பயன்பாடு இல்லாமல், மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நேரில் பார்த்தபோது அறிந்துகொள்ள முடிந்தது.

பிபிசிதமிழ் செய்திக்காக ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள அந்த மையத்திற்கு நாம் சென்றபோது அந்த மையத்தின் வெளிப்புற கதவுகள் திறந்தே இருந்தன.

பாதுகாவலர் யாரும் இன்றி, பயன்பாட்டில் இல்லாத முதுமக்கள் தாழி மையத்தின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, சில உடைந்த பொருட்கள் அந்த அறையில் சிதறிக்கிடந்தன.

முதுமக்கள் தாழி மையத்தின் தரை தளத்தில் மது பாட்டில்கள் கிடந்தன . மாலை நேரத்தில் சிலர் அந்த மையத்தில் வந்து மது அருந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கீழடி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாக சொல்லும் தமிழக அரசு, ஆதிச்சநல்லூரை மறந்துவிட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஜபார்.

”முதுமக்கள் தாழி மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு ஊரில் கிடைத்த பொருட்களை அந்த ஊரில் காட்சிப்படுத்தவேண்டும் என்பது விதி. பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டால், இங்குள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் மையமாக இந்த இடத்தை மாற்றமுடியும்,” என்றார்.

மாநில தொல்லியல் துறை அமைச்சரின் பதில்

தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கேட்டபோது உடனடியாக அந்த மையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ”முதுமக்கள் தாழி மையம் இருக்கும் நிலையை உணர்த்தும் படங்களை அனுப்புங்கள். உடனடியாக இந்த விவகாரத்தை கவனிப்பேன். தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. நிச்சயம் இதை சரிசெய்யலாம்,” என்று அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய அகழ்வாய்வு

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடத்திவரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவரால் அகழ்வுப் பணிகள் தொடங்கியது என்றார்.

”ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கிராமத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கையைக்கூட வெளியிடவில்லை,” என்றார் காமராசு.

அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ”2004 மற்றும் 2005ல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று எந்தத்தகவலும் வெளியிடப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளேன்,” என்றார்.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையத்தில் மதுபாட்டில்கள்

அறிக்கை சமர்ப்பிக்க ஏன் தாமதம்?

அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரி சத்யமூர்த்தியை அணுகினோம். அவர் தான் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணத்தை தொல்லியல் துறையில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார்.

அகழ்வாய்வு ஆவணங்களை தயாரிப்பதில் இருந்த தாமதம் பற்றிக்கேட்டபோது, ”ஆதிச்சநல்லூரில் அகழ்வு பணிகளின்போது நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அதன் காலத்தை நிர்ணயம் செய்தவற்கு இந்தியாவில் நிபுணர்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட தாமதம் நேர்ந்தது. நான் அனுப்பியுள்ள ஆவணத்தை சரிபார்க்க வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார்கள்,” என்று சத்யமூர்த்தி கூறினார்.

அகழ்வாய்வில் கிடைத்த துளையிட்ட மண்டைஓடு

சத்யமூர்த்தி அகழ்வு செய்து கண்ட பொருட்கள் பற்றி கேட்டபோது,”ஆதிச்சநல்லூரில் இருந்தவர்கள் பலவகையான இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் என்றும் அவர்கள் அருகில் இருந்த துறைமுக நகரத்தில் வணிகர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதுபோன்ற தகவல்களை ஆராய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்,” என்றார் சத்யமூர்த்தி.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்

அவர் மேலும் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் மருத்துவர் ராஜா ரெட்டி ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடு ஒன்றில் துளை இடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு சான்று இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதத்திற்கான காரணங்களைக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், ஆய்வு அறிக்கை ஒய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தியிடம் உள்ளதாக மூத்த அதிகாரி ஏஎம்வி சுப்ரமணியம் தெரிவித்தார்.

மேலும் முதல்கட்ட தகவல்கள் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 2003-04, 2004-05 ஆவணங்களில் இருப்பதாக கூறினார். ஆய்வு குறித்த தகவல்களை சத்தியமூர்த்தியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரி சத்யமூர்த்தி ஆய்வறிக்கை தன்னிடம் இல்லை என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூறினார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...