“நான் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்” லியோ படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் புகழாரம்! | தனுஜா ஜெயராமன்
லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழா நாயகனாக பங்கேற்ற நடிகர் விஜய்-ஐ பார்க்க ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர். இதனால் அரங்கத்தின் உள்ளே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் ‘பிக் பாஸ்’ ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான படம் லியோ. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சன்ஙகளை பெற்றிருந்தாலும், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போதுவரை லியோ படத்தின் வசூல் 500 கோடிகளை கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கின் நடுவே விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ‘ராம்ப்’ (Ramp) அமைக்கப்பட்டுள்ளது. அதில் விருந்தினர்கள் நடந்து வரும்போதே சூழ்ந்திருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். குறிப்பாக, விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது. விழா தொடங்குவதற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் கண்களால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை” என பேசியுள்ளார்.