“கூழாங்கல்” – வறண்ட பூமியில் வறண்டு போன மனிதர்களின் மொழி! – விமர்சனம் | தனுஜா ஜெயராமன்
கருப்பு உருவமும் அழுக்கேறிய துணிகளும் படி்ப்பறிவில்லா பாடி லேங்குவேஜுமாக குடிகாரன் சாரி மதுப் ப்ரியன் ஒருவர் தனது பத்து வயது சிறுவனுடன், கோபித்து கொண்டு போன மனைவியை அவரது தாய் வீ்ட்டிலிருந்து அழைத்து வர சாரி அடித்து இழுத்து வரும் கொலைவெறியுடன் கிளம்புகிறான்.
அவன் படம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறான். அவனை பின் தொடரும் சிறுவனை போல நாமும் அவனை தொடர்கிறோம்.
அந்த பெண்ணின் அம்மா வீடு சூழ்நிலையே அந்த பெண்ணிற்கான வரவேற்பினை குறியீடு மூலமே தெரிவிக்கிறார் இயக்குனர்.. ஆர்வம் தூண்டும் அப்பெண்ணை கடைசி வரை காட்டவில்லை என்பது நல்ல கதையுக்தி.
படம் முழுவதுமே ஐம்பது வார்த்தைகள் இருந்தாலே அதிசயம்.. அதுவும் அந்த புரியாத தமிழ் மாநகரங்களில் வாழும் நமக்கு புரிய வாய்ப்பில்லை.. ஏதோ ஒரு வட்டார வழக்கு தமிழ் என்பது மட்டும் புரிகிறது. ஆக்சுவலாக படம் புரிய வார்த்தைகள் ஏதும் தேவையில்லை.
பையனும் அப்பாவும் நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.. பட்ட வெயிலில் … அவர்கள் நடக்க நடக்க நமக்கும் கால் வலிக்கிறது.. அவர்களுக்கு நா வறள நமக்கும் நா வரள்கிறது.
அவன் முதுகில் சுடும் வெயில் நம்மை சுடுகிறது. காலில் அடிபட்டு நகம் பீய்ந்து ரத்தம் நிஜமாலுமே வருகிறது. பட்ட பகலில் கருநாகம் ஒன்று கடந்து செல்ல நமக்கும் பீதி உண்டாகிறது.
வயலில் ஒட்டை போட்டு பொந்து வழியாக நெருப்பு புகை போட்டு எலி பிடிப்பது வறுமையை சொல்கிறது ..நம் வயிற்றை பிசைகிறது.
எலியில் கால்களை உடைத்து போட்டு எங்கும் ஓடாமல் செய்வது, அதன் வாயில் குச்சியை சொருகி நெருப்பில் வாட்டி .. ஐயோ என்று இருக்கிறது..
மணலில் குழி தோண்டி அடியில் வரும் கலங்கிய நீரை குடத்தில் சேமிக்கிறார்கள்.
இருபுறமும் பாறைகள் அடந்த வறண்ட பூமி , காய்ந்து சருகாக நிற்கும் மரங்கள் என எத்தனையோ குறியீடுகள்.
காலி கூல்ட்ரிங்க் பாட்டிலை நாய்குட்டி திறக்க முயலும் இடம், வறண்ட கால்வாய் என நீரின் அவசிய்த்தை சொல்லாமல் சொல்கிறது.
சிறுவன் எடுத்து வரும் கூழாங்கல் அங்கு ஏற்கனவே பத்து பதினைந்து கிடக்கிறது. அந்த குறியீடு எளிய மனிதர்களின் வாழ்வியலை , வாழ்க்கை தரத்தினை சொல்லாமல் சொல்கிறது.
சிறுவயதில் நாம் பார்த்த தூர்தர்ஷனின் ப்ராந்திய மொழி படங்களை நினைவு கூறும் வகையில் படம் இருக்கிறது…
பத்து பதினைந்து விருது படங்களுடன் தான் படம் துவங்குகிறது. இன்னும் கூட நிறைய விருதுகள் கிடைக்கலாம்.
சம்பவங்கள் தான் கதை…
குறியீடுகள் தான் ஹைலைட்.. வசனங்கள் தேவையில்லை..
“இயற்கையின் மொழிகள் புரிந்து விடு
மனிதனின் மொழிகள் தேவையில்லை”
யுவன்சங்கர் ராஜா எதற்கு இதற்கு… மௌனம் தான் படத்தின் இசை…
“இதயத்தின் மொழிகள் புரிந்து விடு..
மனிதர்க்கு மொழியே தேவையில்லை”
ஒளிப்பதிவிற்கு லைட்டிங் தேவையில்லை ..உச்சி வெயில் சூரிய வெளிச்சமே போதுமே
படம் முடியும் போது என்ன உணர்வு என்று சொல்ல தெரியாமல் ஏதோ ஒரு உணர்வு நம்மை தாக்குகிறது.
ஏனோ இனி பாத்ரூமல் ஷவரை திறக்க குற்ற உணர்வு மேலிடலாம்.
லேசாக கலங்கிய நீரை பக்கெட்டோடு கீழே சாய்க்க சற்று தயங்கலாம்..
ஒரு பருக்கை உணவினை சிந்தும் போது எலிக்கறி ஞாபகத்துக்கு வந்து போகலாம்..
நாம் பெரிதும் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்று தோன்றலாம்.
அதற்கு தான் இத்தனை விருதுகள்..
ஆனால் நீண்ட காட்சி அமைப்பை காண பெரும் பொறுமை வேண்டும் என்பது நிதர்சனம்.
– தனுஜா ஜெயராமன்