நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான்..!
ஜவான் படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர்.
ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறத். இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். முக்கியமாக 10க்கும் மேற்பட்ட படங்களின் மூவி மிக்சர்தான் ஜவான் என ஓபனாக கூறினார். இருந்தாலும் வட மாநிலங்களில் ஜவான் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது.
இந்நிலையில் ஜவான் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற கேள்வி இருந்தது. தற்போது அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. தியேட்டரில் ரிலீஸாகி 8 வாரங்களுக்கு பிறகு ஜவான் ஓடிடியில் ரிலீஸாகவிருப்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே ஜவான் படத்துக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் காரணமாக அட்லீக்கு ஹிந்தியில் மவுசு ஏறியிருப்பதாகவும்; அநேகமாக அடுத்ததும் ஷாருக்கானை வைத்து அவர் இன்னொரு படத்தை இயக்கலாம் என்றும் பாலிவுட் மற்றும் கோலிவுட்டிலிருந்து பேச்சு அடிபடுகிறது.