டி.சி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா அரசு! | தனுஜா ஜெயராமன்
சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, டி.சி.எஸ். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6.08 லட்சமாக உள்ளது.
டி. சி.எஸ். நிறுவனம் தனது தேவைக்கு ஏற்ப தற்போது வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டி.சி.எஸ். நிறுவனம் ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்பாராத ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
மேலும் அந்த விவகாரம் தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஜூலையில் மகாராஷ்டிரா தொழிலாளர் துறை அமைச்சகத்திடம், டி.சி.எஸ். நிறுவனத்துக்கு எதிராக புனேவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சங்கமான நாசென்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட் ஒரு புகாரை தாக்கல் செய்தது.
அந்த புகாரில், டி.எஸ்.எஸ். நிறுவனம் வேலைக்கு எடுத்த நபர்களை பணியமர்த்துவதில் தாமதம் செய்கிறது. இதனால் 200 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா தொழிலாளர் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிராவின் தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக, 2023 நவம்பர் 2ம் தேதி மதியம் நிறுவனத்துக்கும் புகார்தாரருக்கும் இடையிலான கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சேர்ப்பு தாமதம் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.