இந்தியா-கனடா மோதல்.. 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்படும்! | தனுஜா ஜெயராமன்
இந்தியா-கனடா இடையேயான மோதல் காரணமாக கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்தது.
இந்நிலையில் தான் நாளை முதல் 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இருநாடுகளிலும் இருந்து தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை வெளியேற இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது. இவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலுமாக வெளியேறினார்கள். இந்த பிரச்சனைக்கு நடுவே கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கனடாவில் செயல்படும் இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல் இருந்ததால் விசா தொடர்பான பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் தற்காலிகமாக விசா வழங்கும் பணி நிறுத்தப்பட்டதாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து இருந்தார்.
இதனால் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வர முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் தான் இந்தியா மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கனடா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் மீண்டும் நாளை முதல் கனடா-இந்தியா இடையேயான விசா சேவை தொடங்கப்பட உள்ளது.
நாளை முதல் என்ட்ரி விசா, பிசினஸ் விசா, மெடிக்கல் விசா மற்றும் கான்பரன்ஸ் விசா உள்ளிட்டவற்றின் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.