பி.எஸ்.வீரப்பா
பி.எஸ்.வீரப்பா பர்த் டே டுடே!
அலட்சியமான சிரிப்பு. அட்டகாசமான உடல்மொழி. வெண்கலக் குரல். கன கம்பீரமான உச்சரிப்பு. தமிழ் சினிமாவின் வில்லன்கள் வரலாறு பி.எஸ்.வீரப்பாவிடமிருந்தே தொடங்குகிறது.
இந்தி சினிமாவின் புகழ்பெற்ற வில்லன் ப்ரான் அவர்களை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இந்திய சினிமாவின் வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். வில்லன் நடிகர் என்ற பெயர் புகழ்பெறத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் அந்தப் பெயர் நிலைக்க ஆரம்பிக்க, பாடுபட்ட முக்கியமான நடிகர் இவர். இப்பொழுதும் இந்தியின் க்ளாஸிக் படங்கள் பற்றிப் பேசினால், அதில் இவரது பெயரும் இருக்கும்.
இப்போது எதற்கு இந்த வரலாற்றை நான் சொல்கிறேன் என்றால், தமிழில் வந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை எஸ்.எஸ்.வாசன் இந்தியிலும் எடுத்தார். அதில் வில்லனாக ப்ரான் நடித்தார். தமிழில் வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் ஆடும் புகழ்பெற்ற நடனக்காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில்,”சபாஷ் சரியான போட்டி..”என்றொரு வசனம் வரும்.
இதே வசனம் இந்தியில் ப்ரான் பேசுவதாக வரும். அந்த வசனம் மிகப்பெரிய தாக்கத்தை இந்தியில் ஏற்படுத்தவில்லை. ஆனால், இதே வசனம் தமிழ் சமூகத்தில் இன்றளவும் புழக்கத்தில் இருக்கும் ஒரு பழமொழியை போல மாறி நிற்கிறது. இந்த வசனத்தைக் குறிப்பிட்டு, ப்ரானிடம் அவர்களிடம் “தமிழைப் போல இந்தியில் இந்த வசனம் ஏன் அவ்வளவு புகழ்பெறவில்லை?” என்ற கேள்வியைக் கேட்டபொழுது, அதற்கு அவர் சிரித்துக்கொண்டே,”என்ன செய்ய.. தமிழில் இந்த வசனத்தை உச்சரித்த பி.எஸ்.வீரப்பாவிற்கு இருப்பதை போன்ற குரல் எனக்கு அமையவில்லையே!” என்று சொன்னாராம்.
தமிழ் சினிமாவின் வில்லன்கள் வரலாறு பி.எஸ்.வீரப்பாவிடமிருந்தே தொடங்குகிறது. அவரது காலகட்டத்திலேயே எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார் போன்றோர் வளர்ச்சி பெற்றாலும் கூட, பி.எஸ்.வீரப்பாவின் தனித்துவம் தமிழில் இன்றும் அவர் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. என்னதான் பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட, முதன்முதலில் அந்த பாத்திரத்தை ஏற்ற சேன் கானரிதான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு உருவம் கொடுத்தவர். அதைப்போலத்தான் வீரப்பாவும். வில்லன் நடிகரின் திரை ஆளுமை எவ்விதம் இருக்கவேண்டும் என்பதற்கான பாலபாடம் பயிற்றுவித்தவர் அவர்.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
பி.எஸ்.வீரப்பா. பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் `ஆந்த ஜோதி’, `ஆலயமணி’, `ஆண்டவன் கட்டளை’, `நட்பு’ உள்ளிட்ட படங்களைத் தயாரிச்சிருக்ககார். பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரன் என்பவரும் தயாரிப்பாளர் தான். ஆனால் பி.எஸ்.வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.
இதனிடையே ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் வீரப்பா இழந்துவிட்டார். இதில் வாடகை வீட்டில் வசித்து வரும் வீரப்பாவின் மகன் பி.எஸ்.வி.ஹரிஹரனுக்கு, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்பந்தப்படுத்தி இருக்கிறார்.
இது குறிச்ச தகவல் அறிந்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை பி.எஸ்.வி.ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். அதனை பி.எஸ்.வி.ஹரிஹரன் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், டைமண்ட் பாபு மற்றும் சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர் என்பது தனி ரிப்போர்ட்
அன்னார் பிறந்த இன்னாளில் அவரை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி