ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர். இந்தியா இதுவரை 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் 25 மீ. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அடங்கிய மூவர் அணி 1,759 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
4-வது நாளான நேற்று நடந்த குதிரையேற்றம் போட்டியில், ‘டிரஸ்சேஜ்’ அணிகள் பிரிவில் அனுஷ் அகர்வாலா, ஹிரிடாய் விபுல் செடா, திவ்யாகீர்த்தி சிங், சுதிப்தி ஹஜெலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 3 தங்கம் வென்ற இந்தியா அதன் பிறகு குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது.