டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்

 டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது குறித்து பேசிய முதல்வர், இந்த அரசு அமைந்த கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப்பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தகுதியான அரசு அலுவலர்களை தெரிவு செய்ய டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்ற முகமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக் கணக்கானோர் எழுதுகின்றனர். அதனால் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆன்ஸ்க்ரீன் இவாலுவேஷன் முறை பின்பற்றப்படுகிறது.

2021 ஆம் ஆண்டும் தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்ற பின்னர், தமிழ் கட்டாய தகுதித் தேர்வு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழக மாணவர்களுக்காக இது கொண்டுவரப்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களிலும் இது நடைமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில், காலிப் பணியிடங்களை தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப புதிய சட்டத்தை இயற்றி, அதன்மூலம் தேர்வான உங்களுக்கும் உரிய பணி ஆணையை இன்று வழங்குகிறேன். தமிழகத்தில் இருக்கின்ற மத்திய அரசு துறைகளான ரயில்வே, அஞ்சல்துறை, வங்கிகள் ஆகியவற்றில் இருக்கும் காலிப் பணியிடங்களை, நிரப்பும்போதும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதமும் நான் எழுதியிருக்கிறேன். மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழில் நடத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று ஸ்டாஃப் செலக்சன் கமிசன் வாயிலாக 10 மற்றும் 12ம் வகுப்பு தரத்தில், பண்முகப் பணியாளர் (Multi Tasking Staff) அந்த பதவிக்காக நடத்தும் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்தலாம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது என பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...