கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் தொடரும் பணிநீக்கம் ! | தனுஜா ஜெயராமன்
சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிறுவனம் புதன்கிழமை, தனது ஆட்சேர்ப்பு பணிகளை பெரிய அளவில் குறைத்துள்ள காரணத்தால் குளோபல் ரெக்யூட்மென்ட் அணியில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பணிநீக்கம் முன்பு அறிவிக்கப்பட்ட மாபெரும் பணிநீக்க அறிவிப்பில் இல்லை என்றும், தனியாக முடிவு எடுக்கப்பட்டு சில நூறு ஊழியர்கள் இப்பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
ஆனால் குளோபல் ரெக்யூட்மென்ட் அணியில் இருக்கும் முக்கிய பதிவிகளில் இருக்கும் அனைவரும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் எனவும், இப்பிரிவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவிலானோர் மட்டுமே தற்போது பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க வர்த்தக நிதியாண்டின் படி இந்த காலாண்டில் பணிநீக்கம் செய்ய முதல் பெரிய டெக் நிறுவனமாக கூகுள் உள்ளது.
இதனால் மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான் ஊழியர்களும் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுமார் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதேபோல் மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்களையும், அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
மேலும் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத பணிநீக்கம் ஜூலை உடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகரித்துள்ளது, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகரித்துள்ளது என முக்கிய தரவுகள் கூறுகிறது.
கடந்த சில மாதங்களாக முன்னணி டெக் நிறுவனங்களில் இருந்து எவ்விதமான பணிநீக்க அறிவிப்புகளும் இல்லாத நிலையில் பலரும் பணிநீக்கம் முடிந்தது என நம்பினர். ஆனால் இப்போது கூகுள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சில முக்கிய பிரிவு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது.