மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு இன்றளவும் பரவலாகப் பாராட்டப்படுகிறார். அக்டோபர் 2020 இல் ரஜ்னிஷ் குமார் எஸ்பிஐ வங்கி தலைவராக மூன்று ஆண்டுகள் தனது பணியை முடித்தார்.
பல நிறுவனங்களில் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கும் வேளையில் தற்போது முழு நேர பணியாக மாஸ்டர்கார்டு இந்திய கிளையின் தலைவராக ரஜ்னிஷ் குமார் இணைந்துள்ளார்.
முன்னணி கிரெடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவரான ரஜ்னிஷ் குமார் அவர்களை இந்தியா பிரிவின் தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்தது.
மூத்த வங்கியாளராக பணியாற்றிய ரஜ்னிஷ் குமார் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியில் கிட்டத்தட்ட 40 வருட அனுபவம் பெற்றவர். இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா முழுவதும் முக்கியமான செயல்பாடுகளை நிர்வகிக்கும் வங்கியில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்.
இந்த புதிய பதவியில் ரஜ்னிஷ் குமார் மாஸ்டர்கார்டு தெற்காசிய பிரிவுத் தலைவர் மற்றும் இந்தியாவின் கார்ப்பரேட் அதிகாரியான கௌதம் அகர்வால் தலைமையில் இயங்கும் மாஸ்டர்கார்டின் தெற்காசிய நிர்வாகத் தலைமைக் குழுவை வழி நடத்த உள்ளார். இந்த குழு தான் இந்தியாவில் உள்நாட்டு பேமெண்ட் வர்த்தகத்தை வழிநடத்தி வருகிறது.