சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து..| தனுஜா ஜெயராமன்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் மூத்த மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2003 முதல் 2008 வரை அமைச்சரவையில் இடம் பெற்ற அவர் நிதி, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளை கவனித்து வந்தார். 2011 முதல் 2019 வரை சிங்கப்பூர் துணைப் பிரதமராக இருந்து வந்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இவர், 2001 முதல் தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.