மீன்பிடி நிவாரணத் தொகை உயர்வு!
தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது . அக்காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டங்களில் விசைப்படங்குகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த காலங்களில் மீனவர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.
மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000/-லிருந்து ரூ.8000/- ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.