ரேணுகாதேவி மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் மிகப் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த மாதம் 18-8-2023 வெள்ளிக்கிமை அன்று இந்த ஆலயத்தில் அக்கினி வசந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றது.
படை + வீடு = படைவீடு. படைகள் தங்கிருந்த இடம். அன்னை ரேணுகாதேவி படையுடன் வந்து தங்கி அருள்பாலித்ததால் படைவீடு என்றும், இராஜகம்பீர சம்புவராயரர் எனும் அரசன் தனது படைகளுடன் தங்கிப் போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என மருவி வந்துள்ளது.
ரேணுகாவைப் பற்றிய பல புனைவுகள் மகாபாரதம், ஹரிவம்சம் மற்றும் பாகவதப் புராணங்களில் உள்ளன. ரேணுகா தேவிதான் மகாபாரதத்தில் வரும் திரௌபதி எனவும் அது காலவாக்கில் ரேணுகாதேவியாக வணங்கப்படுகிறது என்கிறனர்.
படவேடு திரௌபதி அம்மன் கோயிலில் ஒரு அற்புதமான சிலையைக் கண்டதாகவும் அது பல வரலாறுகளைக் கொண்டுள்ளதாகவும் விவரிக்கிறார் பேராசிரியர் அமுல்ராஜ்,
“படைவீடு – திரெளபதி அம்மன் கோயிலின் முன்மண்டபத் தூண் ஒன்றில் கீழே உள்ள சிற்பத்தை இன்று பார்த்தேன். பெண்ணொருத்தி இடது கையில் கொடிகொன்றை மலரைப் பற்றிக்கொண்டுள்ளாள்.
அவளது வலது காலில் முள் குத்தியுள்ளது போல, அவளுக்குக் கீழே அமர்ந்துள்ள ஒருவர் அதை நீண்ட ஒரு முள்வாங்கியால் எடுக்கிறார். அதற்காக அவள் வலது காலை மடக்கி தூக்கியுள்ளாள்.
மேலும், சமநிலைக்காக (Balance) தனது வலது கையை முள்ளெடுப்பவரின் தலைமீது வைத்துள்ளதையும் காண முடிகிறது. கொடிமகளுக்கு எடுப்பான மார்பகங்கள் மற்றும் உச்சியில் வாரி முடிந்த கொண்டையும் அமர்ந்திருப்பவருக்குப் பின்பக்கம் சரிந்த பெரிய கொண்டையும் உள்ளது.
அழகியலாக வடிக்கப்பட்டிருக்கும் இச்சிலையைப் பாழாய்ப்போன இந்த நவீன வண்ணம்தான் கெடுக்கிறது. என்ன செய்வது?” என்றார் முனைவர் அமுல் ராஜ்.
அவர் மேலும் கூறும்போது, “சில நாட்களுக்கு முன், படைவீடு – வீரக்கோயில் திரெளபதி அம்மன் கோயில் முன்மண்டபத் தூனொன்றில் இருக்கும் கீழ்காணும் சிற்பம் குறித்து, ஒரு பதிவை எழுதினேன்.
இந்தச் சிற்பத்திற்குப் பின்னே, அழகிய புராண கதை ஒன்று வழங்கப்படுவதாகத் தொல்லியல் அறிஞர், வேலூர் கோட்டை அருங்காட்சியக முன்னாள் காப்பாளர் திரு. காந்தி தெரிவித்தார்.
அக்கதை – பார்கடலில் லட்சுமிதேவியோடு பள்ளிக்கொண்டிருந்த பெருமாள், விஷ்ணுவைக் காண ஒரு சமயம் பிருகு முனிவர் வந்தார். பிருகு முனிவர் தன்னைப் பார்க்க வருகிறாரே என்பதை அறிந்த பெருமாள் பள்ளியிலிருந்து எழுந்து சென்று அவர் காலில் விழுந்து வணங்கினார். இதனால் லட்சுமி தேவிக்குக் கோபம் ஏற்பட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இதனைக் கண்ட பிருகு முனிவர் லட்சுமிதேவியை ‘பழங்குடிப் பெண்ணாக நீ போகவேண்டும்’ எனச் சாபமிட்டார்.
அதற்கேற்ப அவர், ஆந்திரா நாட்டில் காட்டில் வாழ்ந்த செஞ்சூ இனத்தவர் ஒருவருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். ஒருநாள் காட்டில் வேட்டையாடிக்கொண்டு அவள் வரும் வழியில் அவளது பாதத்தில் முள் குத்திக்கொண்டது. யார், யாரோ முயன்று பார்த்தும் அந்த முள்ளை அகற்றமுடியவில்லை.
அப்போது அந்தப் பெண்ணின் தகப்பன், “என் மகளின் பாதத்தில் குத்தியுள்ள முள்ளை அகற்றுபவருக்கே அவளை மணம் முடித்து தருகிறேன்” என்று அறிவிப்பு செய்தார்.
இதை அறிந்த, பெருமாள் அங்கே சென்று அப்பெண்ணின் பாதத்தில் புதைந்திருந்த முள்ளை அகற்றினார். அப்போது வலியால் துடித்த அவள், முள்ளை எடுப்பவர் வேறு யாருமில்லை நமது கணவர் விஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்டாள். பின், அவளது தந்தை சொன்னபடியே, அவளை அவருக்கு மணம் முடித்து வைத்தார்.” இதுதான் அக்கதை.
“செஞ்சூலட்சுமி என்ற பெயரில் இன்றும் ஆந்திராவில் இத்தெய்வ வழிபாடு உண்டு” என்கிறார். செஞ்சூ என்பது இருளர் இனத்தைத் தற்போது குறிக்கிறது.
நம்முடைய கோயில் சிற்பங்கள் சில தற்குறிகள் சொல்வதைப் போல, ஆபாசமான பொம்மைகள் அல்ல, அவற்றின் பின்னே பல்வேறு வாழ்வியல், தொன்மக் கதைகள் உள்ளன. அவை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இல்லை என்றால் அவை யாவும் பொம்மைகளாகவும் கற்களாகவுமே தெரியும் பலர் கண்களுக்கு.” என்று குறிப்பிடுகிறார் அமுல்ராஜ்-
படவேடு ஆலய அமைவிடம்– சித்தூர் – திருவண்ணாமலை – கடலூர் நெடுஞ்சாலையில் சந்தவாசலுக்கு மேற்கே 6.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.