தொடரும் புலியின் வேட்டை…(ஜெயிலர்)

 தொடரும் புலியின் வேட்டை…(ஜெயிலர்)

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது ஜெயிலர் படம். படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். கடந்த 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் வெற்றிக்கு முழுமையான காரணமாக ரஜினி உள்ள நிலையில், படத்தின் வில்லனாக களமிறங்கிய விநாயகன், சிவராஜ்குமார் ஆகியோரின் கேரக்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த சன் பிக்சர்ஸ் பதிவு: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ஜெயிலர் படம். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் இவர்களுடன் படத்தில் விநாயகன், வசந்த் ரவி ஆகியோரும் சிறப்பான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

முன்னதாக ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தையும் தயாரித்திருந்தனர். இந்தப் படத்திற்கான பிரமோஷன்களை முன்னதாக சிறப்பான முறையில் செய்திருந்தனர். அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் இசை வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை மேற்கொண்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்ட நிலையில், பல அரசியல் தலைவர்களையும் ஆன்மீகவாதிகளையும் அவர் சந்தித்தார். இந்த பயணத்தின்போது உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் அவர் விழுந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை திரும்பிய ரஜினி கொடுத்த விளக்கமும் ட்ரெண்டானது. பலரது நெகட்டிவ் கமெண்ட்களையும் இந்த விளக்கம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் இந்த செயல் படத்தின் வசூலை பாதித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 10 நாட்களில் படத்தின் வசூல் 500 கோடிகளை நெருங்கியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், ரஜினி தன்னைவிட இளையவர் காலில் விழுந்தது, படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சன் பிக்சர்ஸ் இந்த விஷயத்தில் வேறுமாதிரியான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஜெயிலர் குறித்த பல அப்டேட்களையும் உற்சாக பதிவுகளையும் வசூல் குறித்த தகவல்களையும் வெளியிட்டுவரும் சன் பிக்சர்ஸ் இன்றைய தினம் புலியின் வேட்டை தொடர்ந்து வருவதாக ஜெயிலர் வசூல் குறித்து புதிய பதிவை வெளிட்டுள்ளது. படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மெகா ப்ளாக்பஸ்டராக படம் ரசிகர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதாகவும் தகவல் பகிர்ந்துள்ளது. ரஜினியின் செயலால் படத்தின் வசூல் பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், சன் பிக்சர்ஸ் இதுபோன்ற பதிவை வெளியிட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...