தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்
வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22.
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்..
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.[3] முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் (சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்களை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகர மக்கள், இசை, நடனம் மற்றும் இதர தென் இந்திய கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7 கோடியே 1 லட்சமாக உள்ளது. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் பெரிய சர்வதேச நகரங்களிலிருந்து சென்னைக்கு விமான சர்வீஸ் உள்ளது. இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன. உள்நாட்டு விமான நிலையம் சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்து சென்னைக்கு சாலை வசதி உள்ளது. சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது. சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த இரு ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சர்வீஸ் உள்ளது. சென்னையிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கி வருகிறது. செனனை நகரில் அரசு நகர பஸ்கள் இயங்குகின்றன. சுற்றுலா மற்றும் இதர தேவைக்கு வாடகைக்கார்களும் கிடைக்கும். விமான நிலையத்திலும் ரயில் நிலையங்களிலும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணம் செய்யத்தக்க டாக்சிகள் கிடைக்கும். அதி விரைவு உள்ளூர் ரயில் போக்குவரத்தும் உள்ளது.
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.