மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் ஆய்வு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி பெறப்பட்டது. விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவரங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகின்றன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களில் சந்தேகம் இருப்பவர்களின் வீடுகளில் அதிகாரிகள் கள ஆய்வு நடத்த உள்ளனர். களஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.