ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழா சிறப்பு நிகழ்வுகள்!
ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, காணேஷ், ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் துவக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் திரு தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசின் துணை உயர் கமிஷனர் MD.அரிபுர் ரஹ்மான், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, திருமதி ஐரின் குஞ்சுமோன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி ஜென்டில்மேன்-ll படத்தை துவங்கி வைத்தனர்.
படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளாப் போர்டை இயக்குநர் ஏ.கோகுல் கிருஷ்ணாவிடம் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வழங்கினார். இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆளுயர மாலை அணிவித்து தலைப்பாகையும் சூட்டப்பட்டு கவுரவம் செய்யப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என கணித்து சொன்ன மூன்று நபர்களில் இருவருக்கு இசையமைப்பாளர் கீரவாணியின் கைகளால் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. இன்று வருகை தர இயலாத ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது தங்க நாணயம் வழங்கப்பட்டது.