கீரவாணிக்கு மற்றுமொரு ஆஸ்கார் ஜென்டில்மேன் படவிழாவில் வைரமுத்து!
திரை ஜாம்பவான்கள், சினிமா ப்ரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட “ஜென்டில்மேன்-ll’ பட துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது அதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வைரமுத்து பேசும் போது, தயாரிப்பாளர் குஞ்சுமோன் படம் எடுக்க மூலதனமாக பயன்படுத்துவது பொன், பொருள், நிலம், பணம் எதுவும் அல்ல.. அவரது துணிச்சலை மட்டும் தான். 33 வருடமாக இந்த திரை உலகில் ஒரு தலைமுறையை கடந்துவிட்டார். இத்தனை வருடங்களில் அவர் பட்ட துன்பத்தை போல வேறு ஒரு மனிதனுக்கு நேர்ந்திருந்திருந்தால் ஒன்று அவன் துறவியாக சென்று இருப்பான்.. இல்லை அரசியல்வாதியாகி இருப்பான். ஆனால் குஞ்சுமோன் மீண்டும் படம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவேன் என்கிற லட்சியத்துடன் வந்துள்ளார்.
ஒரு தலைமுறையில் ஒரு வெற்றி பெற்றவர், இந்த இரண்டாவது தலைமுறையில் இரண்டு மடங்கு வெற்றி பெறுவேன் என்றுதான் ஜென்டில்மேன் 2 என தலைப்பு வைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது டென்சிங்கிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட திரும்பிச் செல்லாமல், “சிகரத்தை தொட்டாலும் சரி, சிகரத்தை தொட்டு இறந்தாலும் சரி.. முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என உறுதியாக இருந்தார். அந்தவிதமாக வெற்றியோ தோல்வியோ சினிமாவில் நானே உச்சமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருப்பவர் குஞ்சுமோன். அவரைப் பற்றி பேசுவதனால் ஒரு தனி அரங்கமே அமைத்து பேசலாம்.
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டபோது தனக்கு தோதான தன்னை புரிந்து கொண்டு, தன்னுடைய உயரத்திற்கு தன்னுடன் இணைந்து பயணிக்கின்ற ஒரு நபர் வேண்டும் என்று கேட்டபோது எஸ்.பி.பாலசுப்ரமணியம் கைகாட்டிய ஒரே நபர் இசையமைப்பாளர் கீரவாணி தான். அப்படி தன்னிடம் வந்த கீரவாணியைத்தான் மரகதமணி என்று பெயர் மாற்றி என்னிடம் ஒப்படைத்தார் பாலச்சந்தர்.
33 வருடங்களுக்கு முன்பு அவரிடம் நான் கண்ட அதே இசை இப்போது இல்லை அதைவிட பெரிய இசை இருக்கிறது அதே பண்பாடு, பணிவு, கனிவு எல்லாமே இருக்கிறது. ஜென்டில்மேன் என குஞ்சுமோனுக்கு அடுத்ததாக நான் கருத வேண்டியவர் கீரவாணி தான். இந்த படத்தில் கதாநாயகி பரதநாட்டியம் ஆடும் விதமாக உருவாகி உள்ள ஒரு பாடலுக்கு பூமி வெப்பமயமாதல் பற்றி உள்ளடக்கமாக வைத்துள்ளோம். இந்த பாடல் வெளியான பிறகு ஐநா சபையிலே திரையிட்டால் அவர்களே நிச்சயம் கைதட்டுவார்கள்.
ஆஸ்கர் விருது கீரவாணியிடம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு அதிகம் உழைத்தாக வேண்டும். இல்லையென்றால் இவருக்கா ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தப்படத்திற்காக’ ஏற்கனவே மூன்று பாடல்களை கொடுத்து விட்டேன் வரும் செப்டம்பர்-1க்குள் மீதம் இருக்கும் மூன்று பாடல்களையும் கொடுத்து விடுவேன் என குஞ்சுமோனுக்கு உறுதி அளிக்கிறேன்.. நிச்சயமாக இந்த படத்திற்கும் கீரவாணிக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும்” என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.