மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்
சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி. இந்திய அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றவர். அவரது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். அவரது மகன்தான் ராஜீவ்காந்தி.
ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல்மீது ஆர்வம் இல்லாமல் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டார். படிக்கும் காலத்தில் இத்தாலி நாட்டுப் பெண்ணான சோனியாவைக் காதலித்து மணந்தார். அவர்களுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இரு பிள்ளைகள்.
சோனியாவுக்கும் ராஜிவ் காந்திக்கும் விருப்பம் இல்லாவிட்டாலும் இந்திரா திடீரென மரணமடைந்ததால் ஒரே இரவில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர அரசியல்வாதியானார் ராஜிவ் காந்தி.
இந்திய இறையாண்மையைக் காக்க பாடுபட்டார். இந்தியக் கொள்கையில் உறுதியாக இருந்தார். அந்நிய சக்திகளின் கரங்கள் இந்திய மண்ணில் விழாமல் பாதுகாத்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் எனக் கருதப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய கொள்கையான அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்ற தன்மையைப் பல்வேறு இன, வகுப்பு, கலாசார மற்றும் மதங்களின் சங்கமமான இந்தியத் திருநாட்டில் நிலைநாட்டுவதைக் குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய மக்களிடம் மதங்களின் மத்தியில் தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், காதல், பாசம் இவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அது “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்குத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.”
நாமும் உறுதிமொழி ஏற்போம்.