பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்…
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் , அந்த தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது. பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பாகிஸ்தானில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளியான அவரது வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள தேவாலயங்களை சேதப்படுத்தினர். மேலும் கிறிஸ்துவர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். வன்முறைக் கும்பல் தேவாலயத்தின் மீது புனித சிலுவையை சாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகின.
இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர். தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகின. கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.