திருப்பதி அலிபிரியில் சிக்கிய மூன்றாவது சிறுத்தை! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி அலிபிரி மலைபாதையில் வைக்கப்பட்டிருக்கும் கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனால் அலிபிரியில் நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதனையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடு தேவஸ்தான நிர்வாகத்தினரால் விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆவேசத்துடன் தனது கால்களால் கூண்டை தாக்கியது. இதில் சிறுத்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் வன உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறுத்தை குழந்தையை கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர். கூண்டில் சிறுத்தை சிக்கிய அன்றே லட்சுமி நரசிம்மர் சாமி கோவில், காளி கோபுரம் பகுதிகளில் மற்றொரு சிறுத்தை சுற்றி திரிந்தது. நடைபாதை அருகே சுற்றி திரிந்த சிறுத்தையை பிடிக்க மொகாலி மெட்டு, லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் மற்றும் 35-வது வளைவு ஆகிய இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 50 நாட்களில் நடைபாதையில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. நடைபாதை அருகே அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்களின் வருகை பாதியாக குறைந்து உள்ளது.
இதற்கு முன்பு தினமும் நடைபாதையில் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வந்தனர். நடைபாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரமாக குறைந்து உள்ளது. அலிபிரி வரும் பக்தர்களும் கைத்தடி வழங்கும் திட்டமும் தற்போது துவங்கப்பட்டுள்ளது என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் அலிபிரி செல்லும் பக்தர்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.